Thursday, December 31, 2009

வாழ்த்துக்கள் சொல்வது எப்படி?


வாழ்த்துக்கள் சொல்வது எப்படின்னு நான் விளக்கம் கொடுக்க வரலைங்க..
உங்ககிட்ட கேட்கிறேன்..
தெரிஞ்சவங்க சொல்லுங்க..
ஏதோ, எனக்கு தெரிஞ்சா மாதிரி சொல்லிருக்கேன்..
நண்பர்கள் வாழ்த்துக்களை ஏத்துக்கணும்..


எப்படி சொல்வது?..
கவிதையாக சொல்வதா?
இல்லை வெறும் வார்த்தையாக சொல்வதா?
இல்லை, கவிதை என்று
தலைப்பிட்டு தோன்றுவதை சொல்வதா?

இவ்வருடம் முடிந்து..
புது வருடம் தொடங்கும்
இவ்வேளையில் கவிதையாக
சொல்வதே சிறந்தது.

எனினும்..
எழுத யோசித்தால் காதலிக்குக்
கடிதம் எழுதுபவன் போல..
எழுதிய பக்கத்தை விட,
கிழித்த பக்கங்களே அதிகம் என்பதால்..

காகிதத்தை வீணாக்காமல்
கணிப்பொறியில் அமர்ந்து விட்டேன்..
எதையெழுதி பதிப்பதானாலும்
இதிலேயே செய்தால்..
திருத்தும் வேலை மட்டும் தானே..

இருந்தாலும்..
பரீட்சை எழுதும் மாணவன் போல
வெறும் காகிதத்தை 'மட்டுமே'
கொடுப்பதை விட சொல்ல வந்ததை
சொல்லிவிட்டு போகிறேனே!!..

நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் திவ்யாஹரியின்..

"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!.."

Tuesday, December 29, 2009

அறிவாயா கண்மணியே..


மணமாகி.. 4 மாதங்கள்
ஆனதும் ஒரு நாள்..
மயக்கமானேன்..

வயிற்றை படம் பிடித்தும்..
தகுந்த பரிசோதனை செய்தும்
அறிவித்தார்கள் தாயாக
போகிறாய் என்று..

சந்தோஷத்தை உன்
தந்தையிடம் சொல்லாமல்
இனிப்பு வாங்கி வரச் சொன்னேன்..
உன் வரவை இனிப்போடு சொல்ல..

அதற்குள் வந்த மருத்துவர்
எனக்கு கருக்குழாய் கர்ப்பமென
அறுவைக்கு ஏற்பாடு செய்தார்..

வாங்கி வந்த இனிப்போடு..
"எதற்கும் நிர்வாகம்
பொறுப்பல்ல" எனவெழுதி
கையெழுத்திட்டார் உன் தந்தை..

சில மணிநேரத்தில்
உன்னை கொன்று..
என்னை உயிர்ப்பித்தார்கள்..

நீ கருவறை வராமல்
கருக்குழாயில் நின்று
தற்கொலை செய்தாயோ?

இல்லை, என் தந்தை
என் வலி காணப்
பொறுக்காமல் இறந்தாரே.. அவரை
கொல்ல வந்தாயோ ?

பாட்டி ஆகப்போகும் ஆசையில்
இருந்த என் அன்னை இன்று
ஆறுதல் சொல்ல ஆளில்லாமல்..

உன் வரவின் நோக்கம் எதுவாகினும்
நீ கலைந்தது என்னவோ ஒருமுறை தான்..
உன்னால் நான் கவலையுற்றது
பலமுறை என்பதை
நீ அறிவாயா -என் கண்மணியே..


(பி.கு) இது கவிதையில்லை.. என் புலம்பல்.. அவ்வளவே..
மனதின் பாரம் குறைக்க இதில் பதிவு செய்தேன்..

புலம்பல்கள்..


பேனாவும் பேப்பரும்
கிடைத்தால் கிறுக்கத் தானே
தெரியும் எனக்கு -எப்போதிலிருந்தடா
எழுதக் கற்றுக் கொண்டேன்?

எத்தனை நாள்.. எத்தனை முறை
முயன்றாலும்
கவிதை வரவில்லையடா
காதல் தான் வருகிறது உன்மீது!!..

உன்னை பற்றி எழுத
நினைத்ததென்னவோ
பக்கம் பக்கமாய்..
முடித்ததென்னவோ வெற்றுக் காகிதமாய்..

உனக்காக கவிதை எழுதி
உன்னை அசர வைக்கத்தான்
நினைத்தேன்.. தினமும்
முயன்று கொண்டே..
இன்னும் முடியவில்லை..

இவ்வாறு.. உன்னை பற்றி
கவிதை எழுத தோற்றுப்போய்
வெறும் புலம்பல்களோடே
முடிகிறது என் எழுத்துக்கள்..

Monday, December 28, 2009

காதல் என்பது..


தோழியே..
காதலை அறிவது எளிதல்ல..

உன் - அவன் கண்கள் மோதிக்கொள்ள
ஆவல் பிறக்கும்..

உன் - அவன் கைகள் மோதிக்கொள்ள
காமம் பிறக்கும்..

உன் அவன் சுவாசம் மோதிக்கொள்ள
சொர்க்கம் பிறக்கும்..

இதுவெல்லாம் விளையாமல் இருந்தால்தான்
(உண்மைக்) காதல் பிறக்கும்.

கண்கள் இரண்டால்..


உன் திராட்சைப் பழ

கண்களால் எனை

கவர்ந்தது போதும்;

எப்போது..

என் இதயத் தோட்டத்தில்

படரப் போகிறாய்?..

Friday, December 25, 2009

உனக்கு மட்டும்..


உனக்கு மட்டும்

எப்படி வருகிறது "கவிதை"

என்கிறாள் என் தோழி.

அவளுக்கு தெரியாது;

நான் அழுவதை தவிர்க்க

என் பேனா அழுகிறதென்று!!..

Tuesday, December 22, 2009

நீ..


உன் நெஞ்சினிலே தலைசாய்த்து..
பஞ்சுக் கைகளை கோர்த்து..
அரை நிமிடம் உறங்கினாலும்..
ஆயுள் வரை கிடைக்காது வேறொரு இன்பம்!!!..

நீ குளித்து விட்டு வரும் பொழுது..
கலைந்து அதனதன் இஷ்டத்திற்கு
கிடக்கும் உன் தலை முடிகள்..
அடடா... அதை ரசிக்க மட்டுமே
வேண்டுமொரு ஜென்மம்!!!..

ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள்
தீவிரவாதியாம் - உன் கைகளையும்
சிரிப்பையும் வார்த்தைகளையுமே பயன்படுத்தி
எனை வீழ்த்துகிறாயே உனக்குத் தான்
என்ன பெயர் வைப்பது!!!..

Sunday, December 20, 2009

காதலாய்...


நான்...
எழுமுன் நீ எழுந்து உன்
சின்னச் சின்ன சீண்டல்களில் எனை
எழச் செய்வாய்... - நான்
அடுப்பறை சென்று திணறும் போது
நீ உதவி செய்வாய்... - நான்
உண்ணும் உணவினில் கொஞ்சம்
தரச் சொல்லி கொஞ்சலில் கெஞ்சுவாய்...

பின்...
என் முழு மனமின்றி அலுவலகத்திற்கு
இஷ்டப்பட்டு அனுப்பி கஷ்டத்தில்
என்னையே நொந்து கொள்வேன்..
உன் அழகான கண்ணினால்
எனை அழகாக பருகி உன் பிரிய
மனைவியை பிரிந்து செல்வாய் ...
இங்கு உன் குரல் கேட்க ஆர்வமாய்
நான் இருக்க, என் நினைவாய்...
நீ அங்கு எனக்காக... - உன்
telephone- ring செய்வாய்..
நான் உன் குரலை ரசித்துக் கொண்டு...
உன் முத்தங்களை ருசித்துக் கொண்டு இருப்பேன்..

உந்தன்...
மாலை வரவிற்காக மதியம் 3.00
மணியிலிருந்து காத்திருக்க தொடங்குவேன்..
எனக்காக 10 முழம் முல்லை வாங்க
கடைக்குச் சென்று களைத்து வருவாய்...
அந்த மலரை சூடி அறையெங்கும்
மணத்தை பரவச்செய்து, உன் மனதினில்
இடம் பிடிப்பேன்...

உயிரே...
வாழ்வினில் காதல் செய்யாமல்,
காதலையே வாழ்வாக தந்த,
நீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ!!!...

Friday, December 18, 2009

உங்களுடன்...


வலைதள நண்பர்களே...

உங்கள் பதிவை எல்லாம் படிப்பதோடும், பின்னூட்டமிடுவதோடும் இருந்த நான், இதோ எழுதவும் வந்து விட்டேன்.. என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இருக்கிறேன்.. நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து பின்னூட்டமிட்டு, என்னை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

உங்கள் தோழி.. :- திவ்யாஹரி..

பி.கு: என்னை எழுத சொல்லி வழி நடத்தி முதல் பதிவை வெளியிட துணையாய் இருந்த நண்பர் புலவன் புலிகேசிக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

என்னவனே...