Sunday, January 31, 2010

உயிரே உயிரே பிரியாதே..


உன் இதழ் மலர்ந்து கேட்கும் கேள்விக்கு
பதில் சொல்லக் காத்திருக்கும் அந்நேரம்..

உன் கண் பார்த்து என் கண் வெட்கப்பட
காத்திருக்கும் அந்நேரம்..

உன் செவிகள் நான் பேசுவதை கேட்காதோ
எனக் காத்திருக்கும் அந்நேரம்..

உன் சுவாசம் என் சுவாசத்தில் கலந்து எனை
இன்பப் படுத்தாதோ எனக் காத்திருக்கும் அந்நேரம்..

உன் கைகள் என் கன்னத்தில் காயம் செய்யாதோ
எனக் காத்திருக்கும் அந்நேரம்..

மட்டுமே.. நான் உன்னை
வெறுக்கிறேன்.. ஏனெனில்,

நான் இவ்வாறு ஏங்கும் வரை நீ
எனை விடுத்து தனித்திருக்கிறாயே என்று!!!..

Wednesday, January 27, 2010

சின்ன வலையுலக வாக்கெடுப்பு... ஹி..ஹி..


நேத்து குடியரசு தினம் என்று எல்லாருக்கும் தெரியும்.. எல்லாரும் வாழ்த்துக் கூட சொல்லி மகிழ்ச்சியை பரிமாறிக்கிட்டோம்.. சின்ன வயசுல சட்டையில் தேசியக்கொடி குத்தி, இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுனது எல்லாம் எனக்கு நெனப்பு வந்துச்சி. நேத்தும் வீட்ல தான் இருந்தேன்.. (வெட்டி officer தானே).

போட்டிருந்த night suit மேலே கொடி குத்தி இருந்தேன்.. வாசலுக்கு அத்தை கூப்பிட்டாங்கன்னு போனபோது, பக்கத்து வீட்டு அக்கா, "என்ன சின்ன புள்ள மாதிரி இன்னும் கொடி குத்திக்கிட்டு இருக்க?" என்று கேட்டார்கள்.. நான் உடனே "எந்த வயசா இருந்தா என்ன அக்கா? இன்னிக்கு கொடி குத்திக்கிறது நாம, நம்ம தேசியக்கொடிக்கு மரியாதை செய்யிறதா அர்த்தம். மத்த நாளுல குத்திகிட்டா தான் யாராவது ஏதாவது கேட்பாங்க. இன்னிக்கு குத்திகிட்டா தப்பு இல்ல. ஒவ்வொரு இந்தியரும் குடியரசு தினத்தை கொண்டாடுவாங்க. நீங்க இந்தியன் தானே குத்திக்கோங்கன்னு ஒரு கொடிய குத்தி விட்டு அனுப்புனேன்.

அப்போ தான் ஒரு சந்தேகம் வந்துச்சி..

எத்தனை பேரு நேத்து தேசியக்கொடிய நெஞ்சில சுமந்துகிட்டு கொண்டாடுனாங்கனு தெரிஞ்சிக்க ஆசைப்படுறேன்?

நேத்து தேசியக்கொடி நெஞ்சில குத்திகிட்டவங்க மட்டும் எனக்கு ஓட்டு போட்டா போதும். (இந்த பதிப்புக்கு மட்டும் தான் இந்த கண்டிஷன்).


உங்க ஓட்டை வச்சி எத்தன பேரு நெஞ்சில சுமந்துகிட்டு கொண்டாடுனீங்கன்னு நான் தெரிஞ்சிக்கிறேன்.. நன்றிங்க.

Tuesday, January 26, 2010

குடியரசு தின வாழ்த்துக்கள்..


காலையிலேயே கொடி ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடியவருக்கும்..

பள்ளிக்கு சென்று கொடி ஏற்றியதை பார்த்து மகிழ்ந்த குழந்தைகளுக்கும்..

நேரில் பார்த்து வாழ்த்துக் கூறிய நண்பர்களுக்கும்..

பார்க்க முடியாமல் அலைபேசியில் அழைத்த நண்பர்களுக்கும்..

அதுவும் முடியாமல் குறுந்தகவல் அனுப்பியவருக்கும்..

யாருன்னே தெரியாமல் வெறும் பதிவின் மூலமே கூட நட்பை வளர்க்க முடியும் என உணர்த்தும் பதிவுலக நண்பர்களுக்கும்..

தீபாவளிக்கு, புத்தாண்டுக்கு, பொங்கலுக்கு என்று மட்டும் இல்லாமல், குடியரசு தினத்தையும் பெருமை படுத்தும் விதமாக இன்றும் பதிவு எழுதிய நண்பர்களுக்கும்..

இன்னும் பதிவு வெளியிட முடியாமல் எப்படி வாழ்த்து சொல்றதுன்னு தெரியாம மனசுக்குள்ளேயே வாழ்த்து தெரிவித்துக் கொள்ளும் (நானே பதிவை வெளியிட தெரியாத போது இப்படி தான் வாழ்த்து சொல்லுவேன்) பல நண்பர்களுக்கும்..

அனைத்து இந்தியர்களுக்கும்..

குடியரசு தின வாழ்த்துக்கள்..

Sunday, January 24, 2010

இதுவரை நம் காதலில்..


நீயும் நானும்
ஒரே நிற உடையெனும்
எண்ணம்..

பேருந்தில்
நசுங்களில் நிற்க
வேண்டுமென்ற ஆசை..

ஒவ்வொரு கோவிலாகச்
சென்று பார்க்க வேண்டும்
என்ற ஆவல்..

உனைப் பார்க்க நானும்
எனைப் பார்க்க நீயும்
துடிக்க வேண்டுமென்ற
நம் நினைப்பு..

உன்னருகில் நானும்
என்னருகில் நீயும்
ஒருவர் பேசுவதை
மற்றவர் ரசிக்க
வேண்டுமென்ற
நம் ஆசை..

ஒரு தினம்.. ஒரே அறையில்..
ஒரு முறையேனும்
நீயென் மடியில் படுக்க
வேண்டுமென்ற
உன் ஆசையும்..

உன் மீது சாய்ந்து
நான் மெய் மறக்க
வேண்டுமென்ற
என் தாகமும்..

தியேட்டர்க்குச்
சென்று
படம் பார்க்க மறந்து நான்
உனை ரசிக்க.. நீயும்
எனை ரசிக்க..

இப்படி
எல்லாமுமே
நிறைவேறியது
நம் காதலில்..

கொஞ்சி மகிழ
உன் சாயலில் நானும்
என் சாயலில் நீயும்
கேட்ட
மழலை மட்டும்
இன்னும்
நிறைவேறா ஆசையுடன்..

Saturday, January 23, 2010

நல்லது நினைத்தால்..


"எல்லாம் சரியாகிடும் மாலினி. எவ்ளோ நாள் இப்படியே இருப்பாங்க.. அவங்களுக்கே ஒரு நாள் மனசு மாறும் உன்னை நல்லா வச்சிப்பாங்க" என்று மாலினிக்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தாள் காவியா. அவள் பதிலுக்கு எவ்வளவு தான்டி பொறுத்து போறது?

"என்ன தான் பிடிக்காத மருமகளா இருந்தா கூட குடிக்கிற காபியில கூடவா தண்ணி ஊத்தி தருவாங்க.. குடிச்சா தண்ணில சீனி போட்டு குடிக்கிற மாதிரியில்ல இருக்கு.. தாங்க முடியலடி.. நானும் பார்க்கிறேன். எவ்வளவு நாள் இப்படியே அதிகாரம் பண்ணுவாங்கன்னு.. உடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் தானே.. கொஞ்ச நாளுல எல்லாம் ஆடி அடங்குனதும், நான் தானே எல்லாம் பண்ணனும்.. பார்த்துக்கறத்துக்கு யார் இருக்கா? ஒரே பையன் தானே என புருஷன்.. அதுக்கப்புறம் இந்த கிழவிக்கு காபிக்கு பதிலா கழனி தண்ணி கூட கொடுக்காம காய போடுறேன் பாரு" என்று அழுது கொண்டே புலம்பினாள்.

அதுவரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த காவியா சிரித்தாள்.. "என்னடி என் வேதனை உனக்கு சிரிப்பா இருக்கா? காதலிச்சி கல்யாணம் பண்ணதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் எனக்கு.. ஏன் நீ கூட தான் காதலிச்சி கல்யாணம் பண்ணிகிட்ட. உன்னை உன் மாமியார் நல்லா வச்சிக்கல? எல்லாத்துக்கும் கொடுத்து வச்சிருக்கணும்.." என்று விசும்பினாள் மாலினி..

நான் அதுக்கு சிரிக்கலடி. நீ சொன்னத கேட்டு சிரிச்சேன்.. உன் மாமியார் செஞ்சதெல்லாம், நீயும் செஞ்சா உனக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்னு நெனச்சிட்டு, நீ நல்லாபார்த்துகிட்டா அவங்க மனசு மாறி அதுக்கப்புறமாவது உன்னை வாழ்த்துவாங்கல்ல? அப்போவாவது அவங்க திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுடி என்றாள்.. நீ எது செஞ்சாலும் ஏன்னு கேட்க ஆள் இல்லாத போது கூட அவங்கள, நல்லா வச்சிகிறது தான் அவங்களுக்கு சரியான பாடமா இருக்கும் என்றாள்..

அழுது கொண்டு இருந்தவள் நிறுத்தி "நீ சொல்ற மாதிரியே இருக்கேன் காவியா.. என்ன நடக்கணுமோ நடக்கட்டும். சரிடி, நான் கெளம்புறேன்டி, இவ்வளவு நேரம் எங்கே போனேன்னு அதுக்கு வேற திட்டுவாங்க" என்றாள். அதற்குள் காவியாவின் அத்தை "இரும்மா காபி கொண்டு வந்திருக்கேன். குடிச்சிட்டு போ என்றார். இருவரும் வாங்கி குடித்தனர்.

காவியா யாரும் அறியாமல் மனதிற்குள், "என் அத்தை இவ்வளவு நேரம் நான் பேசுனதை கேட்டிருப்பாரோ? சில சமயம் பிறர் பேசுவதை ஒட்டு கேட்பதும் கூட நல்லதாய் தான் முடியும் போல" என்று நினைத்தாள். ஏனெனில் இன்று தான், காவியாவும் நல்ல காப்பி குடிக்கிறாள்.

Thursday, January 21, 2010

ஆயிரத்தில் ஒருவன்.. 15+ அல்ல..


ஆயிரத்தில ஒருவன் பார்த்தேன்ங்க.. நல்லா இருந்துச்சி. செல்வராகவன் (இயக்குனர்) என்ன சொல்ல வர்றார்னு எனக்கு புரிஞ்சிது.. ஆனா மத்த பதிவர்கள் மாதிரி, எனக்கும் சில சந்தேகம் கேட்கணும் இயக்குனர்கிட்ட.


எதுக்காக படத்துல இவ்வளவு வெளிப்படையான வசனங்கள்.. (கார்த்தி, ரீமா சென் கிட்டயும் ஆண்ட்ரியா கிட்டயும் பேசுற மாதிரியான வசனங்கள் தான் சொல்றேன்..)

எல்லா வலைத்தளங்களிலும், "நல்லா இருக்கு போய் பாருங்க.. செல்வராகவன் முயற்சிக்கு அது தான் நாம செய்ற மரியாதைன்னுலாம் கூட எழுதி இருந்தாங்க.."

அதை நம்பி இன்னிக்கே போகணும்.. அதுவும் இப்போவே.. போயே தீரணும்ன்னு அடம் பிடிச்சி.. போனேன்.. படம் ஆரம்பிச்சதும் கார்த்தி, கதாநாயகிகள் கிட்ட பேசுறதை பார்த்ததுமே என்னடா இதுன்னு தோணுச்சி. இவ்ளோ பேர் இருக்காங்க.. நமக்கு மட்டும் என்னன்னு என்னை நானே சமாதான படுத்திக் கொண்டு கண்டுக்காம படம் பார்த்தேன்.. இடைவேளை அப்போ தான் என் கணவர் ஒரு விஷயம் சொன்னார்.. (அவரும் அப்போ தான் கவனிச்சிருக்கார்) அங்கே நான் மட்டும் தான் பொண்ணு.. எல்லாரும் ஆண்கள்.. ஒரு லேடீஸ் கூட இல்ல..


அவ்ளோ நேரம் வரைக்கும் கொஞ்சமா சவுண்ட் விட்ட பசங்க இடைவேளைக்கு அப்புறம் அதிகமா சவுண்ட் விட்டுட்டு இருந்தாங்க.. (இல்லை எனக்கு தான் அப்படி தோணுச்சோ என்னவோ?) எல்லாரும் நார்மலா சிரிச்சது கூட என்னை கேலி பண்ணுவது போல இருந்தது.. அதுக்கு காரணம் படத்தின் காட்சிகள்.. நல்ல கதை.. அதை நல்ல விதமா சொல்ற திறமைலாம் இருந்தும் ஏன் நீங்களும் இப்படி..


"புரியவில்லை என்றால் கூட ஹிட் கொடுங்கன்னு" உங்களுக்கு பதிலா இங்கே எல்லாரும் (பல பதிவர்கள்) கேட்டுட்டு இருக்காங்க.. கண்டிப்பா அவர்களுக்கெல்லாம் (உங்க அந்த மாதிரியான காட்சிகள்ல) விருப்பம் இருக்காதுன்னு நம்புறேன்.. இருந்தாலுமே இவ்ளோ பகிரங்கமா எதிர்பார்க்க மாட்டாங்கன்னு நம்புறேன்.. ஏனெனில் அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கும்.. அதுவும் பார்க்கும்..


எனக்கு நேற்று ஆறுதலாக இருந்தது ஒரு முஸ்லிம் பெண்ணும் படம் பார்க்க வந்திருந்தது தான்.. அவர் இரண்டாம் வகுப்பில் இருந்திருக்கிறார்.. அவர்கள் கூட முகத்தை மறைத்து தான் இருந்தார்கள்.. நான் என்ன பண்ண..?


நல்ல படம் என்று சந்தோசப் படக் கூட விடவில்லை உங்களின் அந்த காட்சிகள்.. படம் முடிந்து வெளியில் வரும் போது படம் பார்த்த நிறைவை விட, இந்த படம் பார்க்க தியேட்டர்க்கு வந்துட்டோமேன்னு தான் தோணுச்சி.. "நீ மட்டும் தான் இப்படி நெனக்கிற மத்தவங்க அப்படிலாம் நெனக்க மாட்டங்கன்னு" என் கணவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு வந்தார்.. அவர் காதில் விழும் படியே அந்த முஸ்லிம் பெண், தன் கணவரிடம்.. "என்னை திட்டுனீங்களே.. அங்கே பாருங்க ஒரு பெண் என்று என்னை காட்டி சொன்னார்" (அவரும் என்னை மாதிரி படம் பார்க்க அடம் பிடித்திருப்பாரோ என்னவோ..)அந்த பெண்ணுக்கு நான் ஆறுதல் போல.. எனக்கு மட்டும் தான் தோணுதுன்னு நெனச்சது உண்மை இல்லை என்று உணர்ந்தேன்..

கடவுளே.. எல்லா பதிவர்களும் பசங்களுக்காகவே விமர்சனம் போட்டிருக்கீங்களே.. எங்கள கொஞ்சம் நெனச்சி பார்க்க கூடாதா?

மதிப்பிற்குரிய இயக்குனரே.. எங்களுக்கும் ரசனை உண்டு.. எங்களுக்கும் சரித்திரம் தெரியும்.. தமிழ் தெரியும்.. நாங்களும் படம் பார்ப்போம்.. பல ஆண்களுக்கு புரியாத உங்கள் படம் பல பெண்களுக்கு புரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு மட்டும்னு படம் எடுக்காமல் இனி பெண்களுக்காகவும் யோசிச்சி படம் எடுங்க.. மத்த படி நல்ல படம். நல்ல கதை.. நல்ல முயற்சி. உண்மையாவே இந்த படம் எல்லாரும் பார்க்க வேண்டியது.. இதுக்காக கண்டிப்பா நாம பெருமை பட்டுக்கலாம்.. தப்பா சொல்லிருந்தா பின்னூட்டத்துல புரிய வைங்க.. புரிஞ்சிக்கிறேன்.. நன்றி!!


(பி.கு) தயவு செய்து 15 +, 18 + படம் பார்க்கலாம்னு விமர்சனம் செய்வதை விடுங்க.. 'உன்மேல ஆசை தான்' பாட்டு முடிந்ததும் அவர்களின் நடவடிக்கை பார்த்து, சிரிக்கிறேனா பயப்படுகிறேனான்னு எனக்கே தெரியல.. அப்புறம்.. ஒவ்வொருவரும்தன் தலையை தானே வெட்டி கொள்வது (வன்முறை தானே), அதையும் பார்த்து பயம் தான் வருகிறது.. மன திடம் உள்ளவர்கள் பார்க்கலாம்னு எழுதுங்கள்.. கர்பிணிகள் பார்க்க வேண்டாம்னும் எழுதுங்கள்.. உங்களுக்கு புண்ணியமா போகும்..

Tuesday, January 19, 2010

ஆண்கள் என்றாலே இப்படித்தானோ?


திருமணம் ஆனதும் ஆண்கள் எல்லாம் இப்படி தான் மாறி விடுவார்களோ என்று நொந்து போனாள். வாழ்க்கையே முடிந்து போனது போல இருந்தது அவளுக்கு.. திருமணமாகி 5 நாட்கள் தான் ஆகிறது.. அதற்குள்ளேயே..

3 வருடமாக காதலித்த தர்ஷனுக்கும் கீதாவுக்கும் திருமணம் இனிதே நடந்தது. கூடவே வீடு குடி புகுதலும்.. விசேஷங்கள் முடிந்தாலும், வீட்டில் சில வேலைகள் நடந்து கொண்டு இருந்தது.. வேலை ஆட்கள் ஜென்னல் கதவுக்கு தாழ்ப்பாள் வைத்துக் கொண்டு இருந்தார்கள். கீதாவின் ரூமிலும் வேலை நடந்தது. ஆனால் ரூமினுள் வராமல் ஜென்னல் திறந்து வைத்துக் கொண்டு, வெளியில் இருந்து வேலை செய்தார்கள்.

திருமணம் முடிந்து, அன்று தான் தர்ஷன் அலுவலகம் செல்லும் நாள். அருகில் கீதாவை அழைத்து அலுவலகம் செல்வதை சொல்லிவிட்டு ரூம் கதவை மூட வேண்டாம் என சொல்லி விட்டு சென்றான் தர்ஷன். கீதாவுக்கு புரியவில்லை என்றாலும், சரி என்று சொல்லி மூடி விட்டாள்.

சிறிது நேரத்தில்.. ஜென்னலில் ஆட்கள் வேலை செய்வதால் தான் மூட வேண்டாமென சொல்கிறாரோ என்றும், அவ்வளவு நம்பிக்கை இல்லாமலா இருக்கிறார் என்றும், அவளுக்கு நினைப்பு தோன்றியது? உடன் கண்கள் கலங்கின. திருமணம் ஆனதும் ஆண்கள் எல்லாம் இப்படி தான் மாறி விடுவார்களோ என்று நொந்து போனாள். வாழ்க்கையே முடிந்து போனது போல இருந்தது அவளுக்கு..

உடனே அழுகையை கட்டுப்படுத்தியவள் அவனை இது தான் காதலா என்று 4 கேள்வி கேட்க நினைத்து.. அவனுடைய செல்லுக்கு அழைத்தாள்.. இயல்பாக பேசிய அவனிடம், கோபமாக.. "ஏன் அப்படி சொல்லிட்டு போனீங்கன்னு" கேட்டாள். சலனமின்றி அவன் சொன்னான்.. "வீட்டினுள் இருக்கும் மற்றவர்கள் உன்னை தப்பாக நினைத்து விட கூடாதென்று சொன்னேன்."

அவள் தன் தவறை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டதைக் கூட சொல்லவும் வேண்டுமா?


(பி.கு) கதை இல்லை.. கதை மாதிரி..(இது என் முதல் முயற்சி.. அதனால ரொம்ப திட்டிடாதிங்க..)

Saturday, January 16, 2010

உன்னில் ரசிப்பவை..


காலையில் உன்னை எழுப்பும் போது
நீ செய்யும் சிணுங்கல்கள்..

காய் நறுக்கும் போது
நீ செய்யும் சீண்டல்கள்..

உணவு பரிமாறும் போது
நீ செய்யும் சில்மிஷங்கள்..

உன் தாயுடனிருக்கும் போது
நீ செய்யும் ஜாடைகள்..

உன் தம்பி தங்கையுடன் அரட்டை
அடிக்கும் போது உன் செல்லக் கோபங்கள்..

நீ எனக்கு வாங்கி வந்த இனிப்பை
உன் தங்கைக்கு தரும்போது நீ படும் அவஸ்தைகள்..

அனைத்து வேலைகளையும் முடித்து..
களைத்து வரும் போது வருடி விடும் உன் கைகள்..

அனைத்தும் ரசிப்பேன்..
எத்தனை முறை.. எத்தனை விதமாக..
சொன்னாலும் காதல் சுகமானது தான்!!..

Friday, January 15, 2010

"குட்டி" குட்டி விமர்சனம்..


"குட்டி விமர்சனம்"ங்க.

"குட்டி" படம் பார்த்தேன்..
தனுஷ், ஷ்ரேயா நல்லா நடிச்சிருக்காங்க..
காமெடி கூட கலக்கல்.. பாடல்கள் ரசிக்கலாம்..
தனுஷ் பண்றதெல்லாம் படம் பார்க்கிற எல்லாருக்கும் பிடிக்கும்..
தமிழுக்கு புது கதை தான்.. அரைச்ச மாவு இல்ல..
ஜாலியா இருக்க நெனச்சா குட்டி போங்க.. அவ்ளோ தான் சொல்ல முடியும்.. எல்லாரும் பாருங்க..
மொத்தத்துல ரொம்ப நல்லா இருக்கு..



(பி.கு: அவ்ளோ தானான்னு கேட்குறீங்களா? அதான் "குட்டி விமர்சனம்"னு ஆரம்பிக்கும் போதே சொன்னேன்ல.. வேணும்னா படம் பார்த்துட்டு நீங்க நிறைய எழுதுங்க.. எனக்கு அவ்ளோதான் எழுத வரும்.. ஹி.. ஹி.. ஹி..)

Wednesday, January 13, 2010

பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல்..


கெட்ட விஷயங்களை மறந்து..
புது வாழ்வு வாழ போகி..

வாய் மட்டும் இல்லாமல்..
பேசும் வார்த்தையும் இனிக்க கரும்பு..

வெள்ளை உள்ளங்கொள்ள
வலியுறுத்தும் பொங்கல்..

வாங்குபவர் வாழ்வும்
மங்களகரமாக மாற மஞ்சள்..

உழைத்த உள்ளங்கள் குளிர
அவர்களை போற்ற உழவர் திருநாள்..

அன்னையை போல பால் தந்து
உயிர்காக்கும் பசுவுக்காக பூஜை.. மாட்டுப் பொங்கல்..

அனைத்து பெண்களையும் போற்றும் வகையிலும்,
மகிழ்விக்கும் வகையிலும்.. கன்னிப் பொங்கல்..

இது பற்றி எல்லாம் நினைக்காமல் நடிகர்,
நடிகையிடம் பேட்டி காணும் டிவி சேனல்கள்..

தமிழே அறியாத அந்த நடிகை
சொல்லும் "ஏன் யணிய போன்கள் வழ்த்துக்கள்"..

இதற்கு மத்தியில் ஒரு தொலைக்காட்சி மட்டும்
உண்மையான அர்த்தம் அறிந்து
கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது!!..

அனைவருக்கும் உங்கள் தோழி திவ்யாஹரியின்
இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Tuesday, January 12, 2010

நமக்கும் எப்போது?


நமக்கும் எப்போது?

எல்லா சுபயோக சுபதினத்திலும்

ஏதாவதொரு நட்ஷத்திரத்தில் அமைந்த

ஏதாவதொரு நல்வேளையில்

பெரியோர்கள் கூடி

திருமணங்களை நிச்சயித்துக்

கொண்டுதானிருக்கிறார்கள்..

நமக்கும் எப்போது?


வசந்தத்தை எதிர்நோக்கி..

பல பருவங்களையும் எதிர்பார்த்து தான்

காலமும், நேரமும்

மனிதர்களும், விலங்குகளும்

மரங்களும், மலைகளும் காத்திருக்கின்றன..

ஆனால் அன்பே நானோ..

உன் புன்னகையால் எனக்கு வரும்

வசந்த காலத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன்..


நிவாரணம்..

செத்துக் கொண்டிருக்கும்

நம் உணர்வுகளுக்கு

உன் டெலிபோன்

முத்தம் தான்

..ஒரே நிவாரணம்

என்ன கொடுமை சார் இது?


சாதாரணமாக (ஒரு பெண்ணாக இருந்தும்) எனக்கு நாடகம் பிடிக்காது.. அதிகமாக அழ மட்டுமே வைப்பதால்.. நான் சாப்பிட எப்போதும் இரவு 10 மணிக்கு தான் போவேன்.. என்னுடன் என்னவரும் சாப்பிடும் போது (அவருக்கும் நாடகம் பிடிக்காது என்பதால்) ஜோக்ஸ் சேனல் தான் பார்ப்பது வழக்கம்.. இன்னிக்கு என் நேரம் என்னவருக்கு night shift. என் அத்தை நாடகம் பார்க்கும் போது சாப்பிட போய் விட்டேன்.

சன் டிவியில் 10 மணிக்கு ஒரு நாடகம் பார்க்க நேர்ந்தது.. ஒரு பெண் வெளியில் நின்று பழைய பேப்பர் வாங்கும் நபரிடம் பேசிக் கொண்டு இருக்கிறாள்.. அதை உள்ளிருந்து பார்த்த அவளோட புருஷன் அந்த நபரிடம் "என்ன பேசிகிட்டு இருந்த என் பொண்டாட்டிகிட்டன்னு கேட்டு.. கூடவே உன்னை தப்பா நினைக்கல.. அவ மோசமானவன்னு" சொல்றான்.. கடவுள் புண்ணியத்துல கேபிள் cut .. நான் தெரியாம தான் கேட்குறேன்.. 4 வருஷம், 5 வருஷம்ன்னு சீரியல் எடுக்குறீங்க.. கடைசி 2 நாளுல அந்த கொடுமைக்கார புருஷன் திருந்துற மாதிரிகாட்டுறீங்க..

4 ,5 வருஷம் பார்த்தது மக்கள் மனசுல பதியுமா?
2 நாள் பார்த்தது மக்கள் மனசுல பதியுமா?

நாங்க (நான் இல்லைங்க. என்னை மாதிரி வீட்டுல இருக்குற பெண்கள்.. வேலை கிடைக்காம, வேற பொழுது போக்கு இல்லாம இருக்கும் ஆண்கள்..) உங்ககிட்ட என்ன எதிர்பார்த்து டிவி முன்னாடி உட்காருறோம் தெரியுமா? அவன், அவனுக்கு வீட்ல ஆயிரம் பிரச்சனை அதை மறக்க தான் உட்காருறோம்.. அதை விட பெரிய கொடுமையை பார்க்க நேர்ந்தால் எப்படிங்க? அழுதால் தான் பார்ப்போம்னு நாங்க சொல்லல.. வேற வழி இல்லாம பார்க்கிறோம்.. யாராவது, எந்த குடும்பமாவது சந்தோஷமா இருக்குற மாதிரி காட்டினால் தானே பார்ப்பவர்களின் மனசும் லேசாகும்.. இப்படி கூட வாழலாம்ன்னு தோணும்.

நீங்க அழறத பார்த்து, அழவே இவ்வளோ பேர் இருக்கும் போது நீங்க சிரிச்சா சிரிக்காமலா போய்டுவாங்க.. அதுக்காக மொக்க ஜோக்லாம் போட்டு சாகடிக்க வேண்டாம்.. N .S .K . மாதிரி சிரிப்போட சிந்தனையையும் சேர்த்து கொடுங்க.. ஒரு புருஷன் பொண்டாட்டிய எப்படி வச்சிக்கணும்னு எடுங்க.. ஒரு தந்தை எப்படி இருக்கணும்ன்னு உதாரணம் காட்டுங்க.. ஒரு குழந்தை எப்படி வளரணும்னு காட்டுங்க.. கண்டிப்பா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..

ஏதோ சொல்லணும்னு தோணுச்சி.. தப்பா ரைட்டான்னு வோட்டுகளிலும் பின்னூட்டத்துலயும் சொல்லுங்க.. ரொம்ப திட்டிடாதிங்க.. ஏனெனில் இதான் நான் எழுதின முதல்.. முதல்.. முதல்.. (பாருங்க எப்படி சொல்றதுன்னு கூட தெரியாம முழிக்கிறேன்).. "சீரியல் பற்றிய கருத்துன்னே" வச்சிக்கலாம்.. நன்றி..

Monday, January 11, 2010

2009 போனால் என்ன? 2010 வந்தால் என்ன?


துளிர்க்கலாம்..

பூக்கலாம்..

உதிரலாம்..

மரம் நிரந்தரம்;
மழையும்..

எனக்குள்
நீயும்!!..

போதும்!! போதும்!!


உன் கண்ணால்
காதலை கற்றேன்..

உன் உதட்டால்
மென்மையை கற்றேன்..

உன் நாவால்
கனிவை கற்றேன்..

உன் சிரிப்பால்
அழகை கற்றேன்..

உன் பேச்சால்
ரசிப்பை கற்றேன்..

உன் அன்பால்
நாணத்தை கற்றேன்..

போதும்.. போதும்..
நீ கற்றுக் கொடுத்தது.. -உன் பிரிவையும்
கற்றுக் கொடுக்க முயலாதே..
கற்க என்னால் முடியாது!!..