Wednesday, March 31, 2010

முந்தைய பதிவின் முடிவு..


இதற்கு முந்தய பதிவை படிக்காதவங்க படிச்சிட்டு வாங்க.. தில் இருந்தா.. ஹி.. ஹி.. முந்தய பதிவில் சஸ்பென்ஸ் வைக்கும் எண்ணம் இல்லை. இடம் பற்றாத காரணத்தால் அதை பாதியிலேயே முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு.

அந்த பெண்ணிடம் கல்யாணம் பற்றி, காதல் பற்றி அறிவுரை சொன்னதும்.. கடைசியாக நடந்த உரையாடல்..

அந்த பெண்: ராஜா என்னை ரெண்டாவதா திருமணம் பண்றதை எதிர்க்குறீங்களா..

நான்: அப்போ புருஷன விட்டுட்டு வரியா?

அந்த பெண்: அது முடியாது. ரெண்டு பேருமே வேணும். (இதுதான் அவள் நினைப்பது)

நான்: நீ குழப்பத்துல இருக்க.. அதனால அவனையும் சேர்த்து குழப்புற. இரண்டாவதா கல்யாணம் பண்ணலாம். தப்பு இல்ல. ஆனா அதுக்கு முதல் புருஷன் குடிகாரன், கொடுமைக்காரன், இல்லை சந்தேகப்பட்டே சாகடிக்கிறவன் இப்டி ஏதாவது ஒண்ணு பண்ணனும். அட்லீஸ்ட் உனக்கு பிடிக்காமயாவது இருக்கணும். எதுவுமே இல்லாத பட்சத்தில், அவனை விட்டுபோக நீ நெனக்கிறது சரி இல்லை. உன் புருஷன் உன்னை கட்டியத தவிர வேற என்ன தப்பு பண்ணாரு. இந்த விஷயம் தெரிஞ்ச அவர் துடிச்சி போக மாட்டாரா? உனக்கும், உனக்கு பிறக்கப் போற குழந்தைக்கும் தான சம்பாதிக்க போய் இருக்காரு. ராஜா இன்னிக்கு இந்த படம் பார்த்துட்டு, 2 பேரை காதலிச்சி பார்க்குறவன் நாளைக்கு வேற படம் பார்த்து உன்னை விட்டுட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவ?

அந்த பெண்: அதான் அக்கா எனக்கும் சந்தேகமா இருக்கு. அதனால தான் நேத்து சண்டை போட்டுட்டு வந்தேன். ஆனா இன்னிக்கு கோபம் இல்லை. அவன் எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.

நான்: சரி உன் இஷ்டம். நல்ல வாழ்க்கை கிடைச்சும் அருமை புரியாம கெடுத்துக்க போற. அவ்ளோ தான். இனி இது விஷயமா என்கிட்டே வராதிங்க.
இதுக்கு பேர் மட்டும் காதல்னு சொல்லிட்டு திரியா.. காதலுக்கே கேவலம்.. good bye.

ராஜாவிடம் நான்: (அந்த பொண்ணு மனசுல உள்ளதை முழுவதும் சொல்லி) கல்யாணம் ஆன பிறகு தொல்லை பண்ண கூடாதுடா. அவளுக்கு ரெண்டு பேருமே வேணுமாம்டா. புரிஞ்சிக்கோ. உனக்கு வேற பொண்ணு கிடைக்கும். அவளை மறந்துடு. அந்த பொண்ணோட புருஷன் வந்தபின் பொண்டாட்டி இப்டி என்று பேச்சு வந்தால் தாங்க மாட்டார்டா.. பாவம்டா அவரு.
அதோட இன்னிக்கு தன் புருஷன் வெளிநாடு போயிட்டான்னு மாறிட்டா. நாளைக்கு நீயும் வெளிநாடு போவ.. நெனப்பு வச்சிக்கோ.

ராஜா: அதை பத்தி எனக்கு கவலை இல்லை. யார் என்ன சொன்னாலும் கட்டுனா அவளை தான் கட்டுவேன். இல்லேன்னா கல்யாணமே வேண்டாம்.

நான்: ரொம்ப சந்தோசம்.. எக்கேடும் கேட்டு போங்க. இனி இது விஷயமா நான் ஏதும் தலையிட மாட்டேன்.. அக்கானு சொல்லிட்டு, தொலைபேசியில் தொல்லை பண்ணாத. good bye.

அதன்பின் அவங்க அம்மா 15 நாள் கழித்து தொலைபேசியில் அழைத்தார்கள். அவனை பற்றி புலம்பினார்கள். இன்னமும் அப்டியே தான் அலையிறானாம் அவள் பின்னாடி.

இங்கு அவளால் அவன் கெட்டானா? அவனால் அவள் கெட்டாளா? ஒன்று மட்டும் நிச்சயம். இவர்களால் அந்த பெண்ணின் புருஷன் வாழ்க்கை போனது. வெளிநாடு செல்லும் சில ஆண்களின் வாழ்க்கை இப்டி கூட கேட்டு போகுதுங்க. பாவம்..

காதல் தப்பு இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயாவில் த்ரிஷா மாதிரி காதல் இருந்தும், ஏத்துக்கவும் முடியாம, மறுக்கவும் முடியாம இருக்குறது கூட காதல் தான்.. இது காதலா? எனக்கு புரியல.

எனக்கு பதிலாக நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே..


எனக்கு தெரிந்த ஒரு பையன் ராஜா. சிறு வயதில் இருந்தே பொறுப்புள்ளவன்.. பாசமிக்கவன். நான்காம் வகுப்பு படிக்கும் போதே அன்னைக்கு உடல் நலமில்லை என்றால், தானே தண்ணி எடுத்து, பாத்திரம் விளக்கி, துணி துவைத்து என அனைத்து வேலைகளையும் செய்து விடுவான். ஏழாம் வகுப்பு படிக்கும் போது சமைக்கவும் செய்தான்.

கிராமத்தில் உள்ள மற்ற பசங்களை விட இவன் நல்லா இருப்பான். அதனால் கிராமத்திற்கே உரிய கிண்டலில் பெண்கள் அவனை எப்போதும் சுற்றிச் சுற்றியே வருவார்கள். இவனோ யாரிடமும் நின்று பேச கூட மாட்டான். காதல் பற்றி நினைத்தது கூட இல்லை. எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவனை சுற்றி வந்த பெண்ணில் ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பித்து விட்டான். அடுத்த சில வருடங்களில் அவனின் குடும்ப சூழ்நிலை காரணமாக அவனை படிப்பை நிறுத்தி.. வெளிநாடு அனுப்பி வைத்தனர் அவன் பெற்றோர்.

வெளிநாடு சென்றும் காதல் தொடர்ந்துள்ளது. முதல் இரண்டு வருடங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த பெண், பின் "தொடர்பு எல்லைக்கு வெளியில்" போனாள்.. யாரிடமும் விசாரிக்க இயலாத நிலையில், தன் காதலை நம்பி வாழ்ந்து வந்தான் ராஜா.

அதன்பின் 3 வருடம் கழித்து ஊர் திரும்பியவன் 1 மாதத்திற்கு பிறகு எனக்கு போன் செய்தான். நான் எப்போதும் போல "எங்கடா இருக்க" என்று கேட்க "சுடுகாட்டுல இருக்கேன்" என்று சொன்னான்.. எனக்கு ஒன்றுமே புரியல. "என்னடா ஆச்சி" என்றால், "நான் லவ் பண்ணவ என்னை ஏமாத்திட்டா அக்கா" என்றான். இவ்ளோ வருஷம் "i love u" சொன்னவ இன்னிக்கு "i hate u" சொல்லிட்டு போயிட்டா அக்கானு புலம்புறான். அவனை தேற்றி, வீடு திரும்ப வைக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.

அந்த குழப்பத்திலும் அந்த பெண்ணின் நம்பரை வாங்கிக் கொண்டு, அவனிடம் ரொம்ப நேரம் கெஞ்சி, அறிவுரை வழங்கிய பிறகுதான் வீட்டுக்கு போக சம்மதித்தான். எப்போதோ "காதலிக்கிறேன்" என்று கூறிய பெண்ணை இன்றும் ராஜா காதலிப்பது எனக்கு கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. மறுநாள் விடிந்ததும் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து என்ன விவரம் என்று கேட்ட பின் தலை சுற்றியது எனக்கு.. இதை படித்த பின் உங்களுக்கும்..

நடந்தது இது தான். ராஜா வெளிநாடு சென்ற இரு வருடத்திற்கு பிறகு அவளுக்கு திருமணம் நடந்து விட்டது. திரும்பி வந்த ராஜா அந்த தோல்வியை கூட அவளிடம் வெளிப்படுத்தாது ரொம்ப நாகரிகமாக நடந்துள்ளான். எங்கேயாவது பார்க்க நேர்ந்தால் கூட காதலை நினைவுபடுத்தாது சாதாரணமாக பேசியிருக்கிறான்.

ஏற்கனவே ராஜாவின் நல்ல குணம் அந்த பெண்ணுக்கு தெரிந்திருந்தாலும்.. காதலி ஏமாற்றியதை கூட பொறுத்து கொள்ளும் அவன் மனம், இவளை தடுமாறச் செய்ததால், மீண்டும் ராஜாவிடம் "உன்னை நான் இப்போதும் காதலிக்கிறேன்" என்று உளறி வைத்துள்ளாள். அத்தோடு அந்த பெண்ணின் கணவன் வெளிநாடு சென்றுள்ளதாகவும், வரும் போதெல்லாம் எதிர்த்து பேசினால் அடிப்பார் என்றும் (கவனிக்கவும் வேறு எதற்காகவும் அடித்ததில்லையாம்) சொல்லியிருக்கிறாள்.

ராஜா உடனே கஷ்டப்படும் அவளுக்கு ஆறுதல் அளிக்கிறேன் பேர்வழி என்று "நானே உன்னை கட்டிக்கிறேன்" என்று சொல்லி, மீண்டும் தொடர்ந்தது இவர்களின் காதல் தொலைபேசியில்..

இதற்கு பின் ராஜா "திருந்தாத ச்சீ.. தீராத விளையாட்டு பிள்ளை" பார்த்து விட்டு, "எனக்கு எதிலும் best வேணும்" என்று ஆரம்பித்து அவன் பின்னால் சுற்றிய இருவரை, ஒரு வாரம் காதலித்து பார்த்து விட்டு, இவளிடம் நடந்ததை விளக்கி "நீ தான் best-ன்னு" சொல்லி மறுபடியும் பெருமையாய்(?) "I love u" சொல்ல, அந்த பெண் "i hate u" என்று ஓடியே போய்விட்டாள்.. இதுக்கு தான் நம்ம தம்பி சுடுகாட்டுல வந்து படுத்துக்கிச்சி..

நீ இன்னும் ராஜாவை காதலிக்கிறியான்னு அந்த பொண்ணுகிட்ட கேட்டதுக்கு "ஆமா"ன்னு வேற சொல்லுது.. புருஷன் வேணுமா, ராஜா வேணுமான்னு கேட்டா, ரெண்டு பேரும் வேணும்னு சொல்லுது அந்த லூசு. அவன்கிட்ட, "கல்யாணம் ஆகிடுச்சின்னா தொல்லை பண்ண கூடாதுடா விடுடா"ன்னு சொன்னா, "கட்டுனா அவளை தான் கட்டுவேன்னு" ஒத்தை காலுல நிக்கிறான்.

இதுக்கு நான்
ரெண்டு பேர்கிட்டயும் என்ன பதில் சொல்லிருப்பேன்?.. நான் என்னை சொன்னேன்னு அடுத்த பதிவில் சொல்றேன்.. நீங்க என் இடத்தில் இருந்தால் அவங்களுக்கு என்ன சொல்லி இருப்பீங்கன்னு மட்டும் சொல்லுங்க.. நிறைய பேர் இப்படி தான் "எது வாழ்கைன்னு" தெரியாம தடுமாருறாங்க.. அவங்களுக்காக நாம பேசுவோம்..

Monday, March 29, 2010

கிடைச்சிடுச்சி.. கிடைச்சிடுச்சி..


நண்பர்களே.. எனக்கு விருது கிடைச்சிடுச்சி.. நண்பர் ஜெய்லானி அவர்கள் தனக்கு கிடைத்த விருதை எங்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.. இது என் முதல் விருது.. மிக்க நன்றி ஜெய்லானி..

நானும் சில நண்பர்களுக்கு விருது கொடுக்க நினைக்கிறேன்.. பெற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே!!

கண்ணா
பித்தனின் வாக்கு
பிரியமுடன் வசந்த்
புலவன் புலிகேசி
மோகனன்
ஸ்ரீராம்
கவிதை காதலன்
சைவக்கொத்துப்பரோட்டா
சும்மா
சிவாஜி சிறகுகள்
சங்கவி
என் எண்ணசிதறல்கள்
என் நடை பாதையில் ராம்
முகிலன்
மங்குனி அமைச்சர்
க.பாலாசி

அப்புறம் எனக்கு விருது கொடுத்த நண்பர் ஜெய்லானிக்கும்..
இவர் எனக்கு கொடுத்ததற்காக இல்லைங்க.. இவரின் பதிவுகளுக்காக..

Sunday, March 28, 2010

பிளாஸ்டிக் உபயோகத்தை தடுப்போம்..

சென்னைக்கு தங்கை வீட்டுக்கு சென்று வந்தேன்.. தங்கை புதிதாக இருசக்கர வாகனம் (scooty pep+) வாங்கியுள்ளதால் என்னை வண்டியில் அழைத்து செல் ஆசைப்பட்டாள்.. "போய் தான் பார்ப்போமே" என்று வண்டியில் சந்தோஷமாகத்தான் ஏறி உட்கார்ந்தேன்.. அவள் இருக்கும் தெருவை விட்டு வண்டி மெயின் ரோடுக்கு வந்தது.. அதுவரை பயந்த நான், இனி ரோடு நல்லா இருக்கும்.. ஜாலியா போகலாம்னு நெனச்சேன்.. ஏன்டா போனோம்ன்னு ஆகிடுச்சி அந்த பயணம்..

இது வரை சென்னை நகரி
ல் எங்கு சென்றாலும், பஸ்சில் மட்டுமே சென்று வந்ததால் வண்டி ஓட்டுபவர்களின் சிரமம் எனக்கு தெரிய வாய்ப்பில்லை.. பிளாஸ்டிக் பையை (carry bag) என்னென்ன காரணத்துக்காக பயன்படுத்தக்கூடாதுன்னு சொல்றாங்களோ தெரியல.. ஆனா ஒரே ஒரு காரணத்தை அன்று உணர்ந்தேன்..

நாங்கள் இருவரும் சிக்னலில் நிற்கும் போது, எங்
கயோ கிடந்த பிளாஸ்டிக் பை ஒண்ணு தூரத்துல பறந்து வந்தது.. என் தங்கையிடம் சொல்லி எச்சரிக்கையாக இருக்க சொன்னேன்.. ரொம்ப தூரத்துல பறந்துகிட்டு இருந்ததால தங்கை, "அதெல்லாம் இவ்வளவு தூரம் பறந்து வராதுன்னு" சொன்னாள்.. நான் உடனே, "வராது தான்.. இருந்தாலும் எதற்கும் தயாரா இரு.. நாம சிக்னலில் இருந்து வண்டியை எடுத்ததும் உன் பக்கம் வந்தா வண்டியை பதட்டப்படாமல் நிறுத்தி விடுன்னு" சொன்னேன்.. நினைத்தது போலவே அது பறந்து எங்கள் பக்கம் தான் வந்தது.. வண்டியை தங்கையும் நிறுத்தி விட்டாள்..

எங்களை
முந்திச் செல்ல வந்த ஒருவரின் முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது.. அவர் சற்று வேகமாக வந்ததால் தடுமாறி விழ பார்த்தார்.. சட்டென்று பையை எடுத்துவிட்டு வண்டியை நிறுத்தி விட்டார். ரொம்ப பயந்துட்டார்.. நாங்களும்தான்.. நம்ம பதிவுலக நண்பர் "புலவன் புலிகேசி" சில நாட்கள் முன்னர் ஒருபட்டம் பறந்து வந்து முகத்தில் பட்டதால் விபத்து ஏற்பட்டதாக ஒரு பதிவில் டரியல் (06-மார்ச்-2010) கூறியிருந்தார்.. எனக்கு உடனே அதுதான் நினைவிற்கு வந்தது..

வண்டியில் வந்தவர் கொஞ்சம் நிதானிக்காவிட்டால் இன்று அவரின் கதி என்ன? அவர் குடும்பத்தின் கதி என்ன? மக்கள் தான் பொறுப்பாக இல்லையென்றால், அரசும் கூட ஏன் இதை பொறுப்பாக தடுக்க கூடாது? "தலைக் கவசம் அவரவர் உயிர்க்கு தான் பாதுக்காப்பு" என்றாலும் கூட மக்கள் அதை பின்பற்றுவதாயில்லை.. இங்கு எதையுமே அன்பாகவும், அறிவுரையாகவும் சொல்வதால் எந்த பயனும் இருப்பதில்லை.. தனக்கு என்று வரும் போது மட்டுமே அதை பற்றி நினைக்கிறார்கள்.. ஆனால் அப்போதும் மற்றவர்களை குறைசொல்லி அலைகிறார்கள்..

"தலைக் கவசம் போடாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்" என்று சொன்னதும்தானே, மக்கள் அதை வாங்கி அணிந்து கொண்டார்கள்? அன்பும், அறிவுரையும் செய்யாததை, கட்டணம் செய்கிறது.. இதையும் கட்டணத்தின் துணையை
கொண்டுக் கட்டுப்படுத்தலாமே.. பிளாஸ்டிக் பையை மட்டும் இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களையே கட்டுப்படுத்தலாமே.. அவரவர் கடமையை செய்யக் கூட லஞ்சம் கொடுத்து பழக்கப்பட்ட மக்கள் தானே.. இதற்கும் கொஞ்சநாள் கொடுத்து விட்டு, திருந்தி விடுவார்கள் என்று நம்புவோம்!!..

Friday, March 26, 2010

கானலாய்...

கனவாக.
.
காற்றாக
..
வெயிலாக..
துயிலாக..
இரவாக..
பகலாக..
எதிலும்
- உன்
நினைவாக

இருக்கச் செய்தவனே..
உன்னில் மட்டும் - நான்
கானலாக இருப்பது ஏன்?..
இமைக்க
மறந்து விட்டேன் - உன்
கண்களின் விசை ஈர்த்ததால்..

உறங்க மறந்து விட்டேன் - உன்
நினைவு உசுப்பியதால்..

உண்ண மறந்து விட்டேன் - உன்
விரல்களின் தீண்டுதலால்..

பேச மறந்து விட்டேன் - உன்
மௌனம் கலங்கடித்ததால்..

ரசிக்க மறந்து விட்டேன் - உன்னையே
நான் ரசித்துக் கொண்டிருப்பதால்..

மொத்தத்தில்
இவ்வுலகையே மறந்து விட்டேன்
அதனால் தானோ நீ என்னை மறந்து விட்டாய் ..!!

Wednesday, March 24, 2010

விடையை சொல்லுங்க பரிசை அள்ளுங்க..

பதிவுலக நண்பர்களே.. இதோ உங்களுக்காக ஒரு புதிர் பதிவு.. ஏதோ எனக்கு தெரிந்ததை கேட்குறேன்.. விடை சொல்லுங்க..

1. கீழ் வரும் ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் அடுத்து வரும் எழுத்து என்னவாக இருக்கும்
O,T,T,F,F,S,S,E,.........?

2. நான்கு 4 களைப் பயன்படுத்தி விடை 45 வரும்படி செய்ய முடியுமா?

3. ஒரு பொருளின் எல்லாப் பக்கமும் ஓட்டை. ஆனாலும் அது தண்ணீர் சேர்த்துவைக்கும் திறன் உடையது, அது என்ன?

4. 100 ரூபாயை பத்தாகப் பிரிக்க வேண்டும். ஆனால் பத்து ரூபாய்த் தாளையோ, நாணயத்தையோ உபயோகிக்கக்கூடாது? பிரித்து காட்டுங்கள் பார்ப்போம்?

5. எட்டு 8 களை மட்டுமே பயன்படுத்தி 1000 வர வைக்க வேண்டும்? எப்படி வேண்டுமானாலும் கூட்டலாம், கழிக்கலாம், பெருக்கலாம், வகுக்கலாம்.


இதற்கு சரியான விடையளித்தால் விடையளிக்கும் அனைவருக்கும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தங்களுடைய மின்னஞ்சலுக்கு (எவ்வித கட்டணமுமின்றி) இலவசமாக அனுப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்..

Tuesday, March 23, 2010

கல்விக் கடன்..


+2
தேர்வுகள் முடிந்து விட்டன. மற்றவர்களுக்கும் கூடிய விரைவில் தேர்வுகள் முடிந்து விடும். அனைத்து மாணவர்களும் மேற்கொண்டு என்ன படிப்பது, எங்கு படிப்பது என முடிவு செய்து இருப்பார்கள். ஆனால் பல பேருக்கு படிப்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கும். எனவே அவர்களுக்கு உதவ எனக்கு தெரிந்த சில கல்விக் கடன் வழிமுறைகளைப் பற்றி சொல்வதற்காகதான் இந்த பதிவு.

முதலில் கல்விக் கடனுக்கான அடிப்படை தகுதிகள் என்னவென்றால் விண்ணப்பிப்பவர் இந்தியராக இருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. அனைத்து இளங்கலை, முதுகலை, டிப்ளமோ, மருத்துவம்,
பொறியியல் போன்ற அனைத்து படிப்புகளுக்கும் கடன் வழங்கப்படும். செக்யூரிட்டி, ஜாமீன், அடமானம் எதுவுமின்றி நான்கு லட்சம் வரை கடன் பெறலாம். நான்கு லட்சம் முதல் ஏழரை லட்சம் வரையிலான கடனுக்கு வருமான வரி செலுத்தும், மாணவரின் உறவினர் எவரேனும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஏழரை லட்சத்துக்கும் மேலான கடன்களுக்கு ஏதேனும் சொத்துக்களை உத்தரவாதமாக கொடுக்க வேண்டும். ஆனால் இவை எல்லாம் அண்ணா பல்கைகழக கவுன்சிலிங் மூலமாக அனுமதி பெற்ற மாணவர்களுக்குத்தான். நிர்வாக ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நான்கு லட்சத்தை விட குறைவான கடனுக்கே வருமானவரி கட்டும் ஒருவரின் உத்தரவாதம் வேண்டும்.

வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கும் பொழுது +2 மதிப்பெண் சான்றிதழ், டி.சி, கல்லூரியில் இடம் கிடைத்ததற்கான அனுமதி கடிதம், செமெஸ்டர் வாரியாக கல்லூரிக் கட்டணங்களின் விபரங்கள் அடங்கிய சான்றிதழ் ஆகியவற்றை கடன் பெறும் மாணவர் முக்கியமாக கொடுக்க வேண்டும். சில வங்கிகள் ஒவ்வொரு செமெஸ்டர் மதிப்பெண் சான்றிதழையும் கேட்பார்கள். ஏனென்றால் ஒரு செமஸ்டரில் அரியர் வைத்தாலும் அந்த மாணவரின் அடுத்த செமஸ்டருக்கான கட்டணத்தை அந்த வங்கி கொடுக்காது. அதனால் வங்கி கடன் தான் கிடைத்து விட்டதே என்று சரியாக படிக்காமல் இருந்தால் கல்விக் கடன் பெற்ற மாணவரின் படிப்பு கனவு சிதைய நேரிடும்.

படிப்பு காலம் முடியும் முன்னரே கடனை திரும்பச் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது என்பது இந்திய வங்கி சங்க விதிகளில் ஒன்று. அதை மீறும் வங்கிகள் பற்றி ரிசர்வ் வங்கியில் புகார் செய்யலாம்.
ரிசர்வ் வங்கியில் புகார் தெரிவிக்க இங்கு கிளிக் செய்யவும்.

அப்துல் கலாமை அமைப்பாளராகக் கொண்ட இளைஞர்களின் அமைப்பு 'action
2020 '. இவர்கள் கல்விக் கடன்களை எளிதாக பெறுவதை சாத்தியப்படுத்த சமீபத்தில் 'எஜுகேஷன் லோன் டாஸ்க் போர்ஸ்' (E.L.T.F.) என்ற குழுவை அமைத்துள்ளனர். உரிய மதிப்பெண்கள் இருந்தும் வறுமை காரணமாக உயர் கல்வியை எட்ட முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப் புற மாணவர்களுக்கு கல்விக் கடனில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைப்பது தான் E.L.T.F - ன் நோக்கம்.எவருக்கேனும் கல்விக் கடன் பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த அமைப்பினை 'action2020eltf@gmail.com' என்ற ஈமெயில் முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்.

Sunday, March 14, 2010

சுட்டி டிவி குழந்தைகளுக்காகவா?

பொதுவா குழந்தைங்க மனசு கள்ளம் கபடமில்லாதது. நாம என்ன செய்யுறோமோ, அதை அப்படியே திருப்பி செய்யும் குணம் படைத்தவர்கள். அந்த பிஞ்சு மனசிலயே அவர்களுக்கு நல்ல விஷயங்கள் மனசுல பதியுற மாதிரி சொல்லிக்கொடுத்துட்டா, அதுவாவே அவங்க மாறிடுவாங்க. "பசங்க" படத்தில வரும் அந்த சின்ன பையன் சொல்லுவானே, தன்னோட பெயருக்கு பின்னாடி கலெக்டர், டாக்டர்.. அதுமாதிரி சின்ன வயசுலயே அவர்களுக்கு பழக்கப்படுத்திட்டா, அவங்க நிச்சயமா அந்த கலெக்டரோ, டாக்டரோ ஆகறதுக்கான தகுதியை வளர்த்துக்குவாங்க...

இப்போ
இருக்குற பசங்களுக்கு தொலைக்காட்சி நிரம்ப பிடிக்கிறது அதில்வரும் நிகழ்ச்சிகளில் வரும் சாகசங்கள் மேஜி
க் இதுபோலவே செய்து பார்க்கணும்ன்னு விரும்புவாங்க .. டான்ஸ் இருக்குற பாட்டு பார்த்தா அதே போல டான்ஸ் ஆடணும்ன்னு விரும்புவாங்க அதே போல ஆபாச காட்சிகள் பார்க்கும்பொழுது அதே போல ஒரு ஆளை கூட்டி வைத்து, அதே போல (விஷயமே தெரியாம) செய்து பார்க்கணும்ன்னு விரும்புவாங்க அது அவங்க மனசு..

சின்னஞ்சிறுசுக மனசு களிமண் மாதிரி நாம எப்படி பிடிச்சு வைக்குறோமோ அப்படியே அழகான வடிவமா உருவாக்குறதும் சிதைக்கிறதும் அவங்களுடைய பெற்றோர்களுக்கு கடமை. அதே போல கடமை தொலைக்காட்சிகளுக்கும் இருக்கு... இப்போ இதுல ஒரு சின்ன குழந்தை வரைஞ்சுருக்குற ட்ராயிங்க் இருக்கு அது பாத்தீங்கன்னா, அது என்னவெல்லாம் பார்த்ததோ அதையெல்லாம் அப்படியே வரைந்திருக்கு..

இன்னொரு படம் சின்ன வயசு காதல் சினிமால வர்ற ஹீரோ, ஹீரோயினுக்கு லெட்டர் தர்ற மாதிரியான சீன் பாத்து இவங்களுக்கும் அதே ஆசை. அதை அப்படியே செய்து பாக்குறாங்க.. இதுல சின்ன பசங்கள குறை சொல்ல முடியாது. அவங்களுக்கு முன்னாடி நாம எப்படி நடந்துக்கணும்ன்னு பெற்றவர்களும், சமூகமும் தான் புரிந்து நடக்க வேண்டும்..

பக்கத்து
வீட்டு அக்கா, நேற்று மாலை வந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். ஏனோ முகம் மட்டும் வாடி இருந்தது.. கொஞ்சம்
தனியாக அழைத்து விஷயம் என்ன வென்று கேட்க. அவர்கள் சொன்னதை கேட்டு அதிர்ந்தேன். அக்காவின் ஒரே பையன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். எப்போதும் "சுட்டி டிவி" மட்டுமே பார்க்கும் பழக்கம் உள்ளவன். படிப்பிலும் படுசுட்டி..

ஒரு நாள் இரவு 8.15 -க்கு அவன் டிவி பார்த்து கொண்டிருக்க, அந்த பக்கம் வந்த அக்கா எதேச்சையாக டிவி பக்கம் கவனம் செலுத்தி உள்ளார். அதில் ஒரு கணவன் மனைவியுடன் படுக்கை அறையில் இருக்கும் காட்சி ஒளிபரப்பாகி கொண்டு இருந்திருக்கிறது. ஏதோ மொழி பெயர்ப்பு படம் என்று அக்கா புரிந்து கொண்டார். அதில் அடுத்த சீன்.. அவர்களின் குழந்தை வந்து கதவை தட்ட.. அந்த பெற்றோர் கதவை திறக்காமல் உள்ளேயே
இருந்திருக்கிறார்கள்.

உடனே
அந்த பையன் "ச்சீ.. இ
வர்களுக்கு கதவை திறக்க கூட நேரம் இல்லை" என்று கூறிவிட்டு போய் விட்டானாம்.. அவன் சலித்துக் கொண்ட விதமே அக்காவுக்கு விபரீதத்தை உணர்த்தி இருக்கிறது.. உடன் சென்று டிவியை அனைத்து விட்டு தூங்கு போய் என்று சொல்லிவிட்டு இனி மொழி பெயர்ப்பு படங்களை பார்க்க அனுமதிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு மறுநாள் மாலை அக்காவின் கணவர் உறங்கி கொண்டிருக்க. அக்கா ஒரு திருமணத்திற்கு போவதற்காக உடை மாற்ற கதவை தாழ் போட்டிருக்கிறார். பள்ளி விட்டு வந்த பையன் கதவை தட தட வென தட்டி இருக்கிறான்.. அக்கா இருடா வர்றேன் அம்மா டிரஸ் மாத்துறேன்னு சொன்னதும் பையன் "ச்சீ.. இவர்களுக்கு கதவை திறக்க கூட நேரம் இல்லை" என்று அதே வசனத்தை சொல்லி பின் அன்று முழுதும் கோபமாகவே இருந்தானாம்..

குழந்தைகளுக்கான சேனல் தானே என்று பார்க்க விட்டது தவறு என்று புலம்புகிறார். தவறு யார் மீது? சுட்டி டிவி மீதா? அதை பார்க்க அனுமதித்த பெற்றோர் மீதா? பார்த்து அதை அப்படியே செயல் படுத்திய குழந்தை மீதா?
குழந்தைகளுக்கான படம் தான் எனினும், தேவை இல்லாத காட்சிகளை நீக்கி விட்டு ஒளிபரப்பு செய்யலாமே. செய்வார்களா?

Saturday, March 13, 2010

ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா-தேவை(யா)!?


ரஷ்யப் பிரதமர் புதின் இந்தியா வந்து சென்றிருக்கிறார். இரு நாடுகளும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. எப்படியும் 15 அல்லது அதற்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் வழக்கம் போல் நடைபெறும் சம்பிரதாயங்கள் தான் என்கிறீர்களா.

ஆனால் இதில் ஒன்று மிக முக்கியமானது. "அட்மிரல் கோர்ஷ்கோவ்" சம்பந்தப்பட்டது. அது யாரு புதுசா இருக்காருன்னு யோசிக்கிறீங்களா. சில பேருக்கு தெரிந்திருக்கும். பல பேருக்கு தெரிந்திருக்காது. அவர்களுக்காக தான் இந்த பதிவு. "அட்மிரல் கோர்ஷ்கோவ்" ஒரு கப்பலோட பேரு. ரஷ்ய நாட்டு விமானம் தாங்கி கப்பல். ரஷ்ய கடற்படைக்கு சொந்தமானது. 1987 ஆம் ஆண்டு ரஷ்ய கடற்படையினரால் உருவாக்கப்பட்டது. அது அதிகம் உழைத்ததால் அதற்கு ஓய்வு கொடுக்க நினைத்தனர் ரஷ்யர்கள். ஆனால் நம் இந்தியாவோ அதனை எங்களுக்கு கொடுத்துவிடுங்களேன் எனக் கேட்க ரஷ்யாவும் தருவதாக கூறி, அதற்கு 150 கோடி டாலர்கள் விலை சொன்னது.

இந்தியாவில் இந்த அளவு பெரிய விமானம் தாங்கி கப்பல் கிடையாது. கட்டுவதற்கு வசதியும் இல்லை. அதனால் இந்தியாவும் அதற்கு சம்மதித்து ஒப்பந்தம் போட்டு விட்டது. இதில் கப்பலில் இருக்கும் விமானங்களும் அடங்கும். பின்னர் கப்பலை புதுப்பித்து தருவதாக கூறி விலையை 290 கோடி டாலர்கள் உயர்த்தியது. இந்தியா இதற்கு சம்மதிக்கவில்லை. எனவே ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. பல ஆண்டுகள் பேரத்துக்கு பிறகு 235 கோடி டாலர்கள் என்று முடிவானது.

கப்பலுக்கு இந்தியா ".என்.எஸ். விக்ரமாதித்யா" என்று பெயரும் சூட்டி விட்டது. கப்பல் இன்னும் இந்தியா வந்து சேரவில்லை. அதை எப்போது சீரமைத்து இந்தியாவிற்கு வழங்க போகிறார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் இந்தியா 2012 இல் இந்திய கடற்படையில் இந்த "விக்ரமாதித்யா" சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க.. ஏற்கனவே ரஷ்யா 1993 இல் கூட "அட்மிரல் இசசென்கோவ்" (Admiral Isachenkov) என்ற கப்பலை இந்தியாவில் scrap-க்கு அனுப்பிவைத்தது. (scrap என்றால் ஒதுக்கிய மீதிப் பொருள், பயனற்ற பொருள் என்று அர்த்தம்.)

இதெல்லாம் சரிதான் ஆனால் எனக்கு ஒரு சிறிய சந்தேகம். ஒரு நாடு உழைத்ததுபோதும் என ஒதுக்கிய ஒரு கப்பலை அதுவும் 23 வருட பழமை வாய்ந்த கப்பலைஇவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா? இது லாபகரமான திட்டம் தானா? இது பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்கலாமா வேண்டாமா என்று உங்கள் கருத்தை சொல்லுங்கள் நண்பர்களே..

மீண்டும்...!!! (படித்ததில் பிடித்தது)


பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த அரசியலும்
அதன் விஷ வேஷமும்...!


பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த நகரமும்
அங்கே தூசிக் காற்றும்...!


பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த பணப் பேய்களும்
மக்கிய மனித நேயமும்...!

பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த உழைக்காத வர்க்கமும்
அதன் உழைப்புச் சுரண்டலும்...!


பிடிக்கவில்லை
எனக்கு..
நான் வாங்கிய பட்டமும்..
அதன் மேல் சிலந்திக் கூடும்...!


பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த தியேட்டர் கூட்டமும்
வீணாகும் முயற்சியும்...!

பிடிக்கவில்லை
எனக்கு...
பாழும் வறுமையும்..
நொறுங்கிய மனங்களும்...!


பிடிக்கவில்லை
எனக்கு...
இந்த காதலும்
அதன் சதைக் கவர்ச்சியும்...!

பாதம் வருடி
கெஞ்சுகிறேன் அம்மா...
மீண்டும்
தாயேன் -உன்

கருப்பையில் இடம்...!!!(பி. கு) இந்த கவிதை யாரால், எப்போது எழுதப் பட்டது என்பது எனக்கு தெரியாது.. சிறு வயதில் இருந்தே, படிக்கும் கவிதைகள் பிடித்திருந்தால் டைரியில் எழுதும் பழக்கம் உண்டு.. அப்படி எழுதி வைத்த கவிதை இது.. தலைப்பு (title) கூட எழுதி வைத்திருக்கிறேன்.. ஆனால் எழுதியர் பெயரை எழுதாமல் விட்டிருக்கிறேன்.. உங்களுக்கும் பிடித்துள்ளதா என பின்னூட்டத்தில் சொல்லுங்கள்..

Wednesday, March 10, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்-சிறு குறிப்பு..

அன்னை தெரசா:-
ஏழைகளுக்கும், நோயில் கஷ்டப்படுபவர்களுக்கும், அனாதைகளுக்கும், வயதானவர்களுக்கும் தொண்டு செய்தார். நிர்மலா சிசு பவனையும், தி சில்ட்ரன்'ஸ் ஹோம் ஆப் தி இமாக்குலேட் ஹார்ட்டையும் அநாதை குழந்தைகளுக்காக தொடங்கினார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி :-
எம்.எஸ். சுப்புலட்சுமியின் முழு பெயர் "மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி". இவர் பிரபலமான கர்நாடக இசைப்பாடகி. ஒரு நடிகையும் கூட. இவரின் "பக்த மீரா" படம் மிகப் பிரபலம். கல்கி சதாசிவம் அவர்களை சுப்புலட்சுமி மணந்தார். 1997-ல் கணவர் இறந்த பின் பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ள வில்லை.
ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்:-
இவரின் இயற்பெயர் மணிகர்ணிகா. இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீராங்கனை. 22 வருடங்களே வாழ்ந்தாலும் சரித்திரத்தில் தன் பெயரை நிலைக்கச் செய்தவர். தன்னுடைய நாட்டை வெள்ளையருக்கு விட்டுக் கொடுக்காமல். தானே முன்னின்று படையை வழி நடத்தி துணிச்சலாக போரிட்டார். போர் புரியும் போது வீர மரணம் அடைந்தார்.
டயானா:-
இவரின் இயற்பெயர் ப்ரான்செஸ் ஸ்பென்சர். இளவரசர் "சார்ல்"சின் மனைவி. அனைவரிடமும் அன்புடன் இருப்பார். அழகானவர். இவரின் எளிமையே அனைவரையும் கவரும். ஊடகத்தில் அதிகம் பேசப்பட்டவர். விபத்தில் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் அனுதாப அலை வீசியது..
ஹெலன் கெல்லர்:-
இவர் காய்ச்சல் காரணமாக சிறு வயதிலேயே கண் பார்வையையும், கேட்கும் சக்தியையும், பேசும் சக்தியையும் இழந்தவர். பிறர் பேசும் பொழுது அவர்களின் உதடுகளின் மேல் கை வைத்து அந்த அதிர்வுகளினால் அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் கலையை(லிப் ரீடிங்) கற்று கொண்டார். இந்த முறையிலேயே படித்து பட்டமும் பெற்றார். பார்வையும் இன்றி, காதும் கேளாமல் முதலில் பட்டம் பெற்றது இவரே. 'ப்ரெயில்' முறை படித்தார். (அதை இவர் கண்டு பிடிக்கவில்லை) பின் ஊனமுற்றோருக்கென தன் வாழ்நாளை செலவிட்டார்.
கிரண் பேடி:-
இந்திய காவல் சேவைப் பணியில் (I.P.S) முதல் பெண் அதிகாரி இவர். டெல்லியில் உள்ள உலகின் மிகப் பெரிதாக கருதப் படுகிற "திகார்" சிறையில் இவர் செய்த சீர்திருத்தங்களும் முன்னேற்றங்களும் பலரின் பாராட்டை பெற்றது. தற்போது விருப் ஓய்வு பெற்று சமூக சேவகியாக தொண்டுகள் செய்து வருகிறார்.
சாந்தா-தனஞ்செயன்:-
வி.பி. தனஞ்செயன். சாந்தா தனஞ்செயன். இவர்கள் இருவரும் தம்பதிகள். இருவரும் பாரத நாட்டிய கலைஞர்கள். சர்வதேச புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு கொண்ட சென்னை அடையாறு "கலாச்சேத்ரா" பாரத நாட்டிய பள்ளி இவர்களுடையது. சென்னை வாழ் மக்கள் கலாச்சேத்ராவில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்புவர்.
அருந்ததி ராய்:-
இவர் ஒரு எழுத்தாளர். இவரின் படைப்புகளில் பெண் அடிமைத்தனம், குழந்தை தொழிலாளர் பிரச்சனை போன்றவற்றை விமர்சித்து எழுதி இருப்பார். 1997-ல் தனது முதல் புதினம் "தி கட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்"க்கு "புக்கர்" பரிசு பெற்றார். "புக்கர்" பரிசு பெற்ற முதல் இந்தியர் இவர்.
இந்திரா காந்தி:-
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஒரே மகள் இந்திரா காந்தி. இந்தியாவின் மூன்றாவது முதல்வர். இந்தியாவின் "முதல் பெண் பிரதமரும்" இவரே. பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் நாட்டை வழி நடத்தினார். 1984-ல் சொந்த பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
பி.டி. உஷா:-
பி.டி. உஷா ஒரு சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனை. அவர் இருந்த காலங்களில் தடகள ஓட்டப் பந்தயத்திற்கு முக்கியத்துவம் கிடையாது. அதுவும் பெண்கள் பங்கு பெறுவது அரிது. உஷா தான் இந்த துறையை பெண்கள் தேர்ந்தெடுக்க முன்னோடியாக இருந்தார். ஒலிம்பிக் ஓட்டப் பந்தய இறுதியில் கலந்து கொண்ட முதல் பெண் இவரே.

Tuesday, March 9, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்..(தொடர்பதிவு)

என்னை தொடர் பதிவுக்கு அழைத்த "வெள்ளி நிலா" நண்பருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
எனக்கு பிடித்த பெண்களில் பத்து உலகளாவிய பெண்களை தேர்ந்தெடுத்துள்ளேன் :-

அன்னை தெரசா

M.S.
சுப்புலட்சுமி

ஜான்சி
ராணி லக்ஷ்மி பாய்

டயானா

ஹெலன் கெல்லர்

கிரண்
பேடி

சாந்தா தனஞ்செயன்

அருந்ததி
ராய்

இந்திரா
காந்தி

பி.டி.உஷா..

இந்த தொடர்பதிவை தொடர நான் அழைக்கும் நண்பர்கள் :-

சித்ரா
தேனம்மை லக்ஷ்மணன்
ப்ரியமுடன் வசந்த்
சைவகொத்துபரோட்டா
ஸ்ரீராம்
பித்தனின் வாக்கு அண்ணா..
சங்கர் அண்ணா..
அண்ணாமலையான் அண்ணா..

நிபந்தனைகள்
:-

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

Tuesday, March 2, 2010

"பதின்மம்" நினைத்து பார்த்தால்..

என்னையும் (நம்பி) அழைத்த கண்ணாவுக்கு நன்றிகள் பல.. பதின்மம் குறித்து நினைத்து பார்த்தால்..

முதலில்..
எனக்கு ஒரே ஒரு தங்கை மட்டும் தான்.. but இருவரும் சண்டை போட்டுட்டே இருப்போம் எப்போதும்.. குறிப்பா சாப்பிடும் போது. எதையும் ரசித்து சாப்பிடும் பழக்கம் உள்ளவள் நான்.. (மறுபடியும் வாங்குவதற்காகவே) சீக்கிரமாக சாப்பிடும் பழக்கம் உள்ளவள் தங்கை.. ஒரு நாள் அம்மா ஜாங்கிரி வாங்கிட்டு வந்து தந்தார்கள்.. நான் வழக்கம் போல ரசித்து கொண்டு கொஞ்சம், கொஞ்சமாக ருசிக்க.. தங்கையோ இருமுறை வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.. நான் எப்போதும் அம்மா கொடுத்ததோட போதும்னு நெனக்கிற ஆளு.. மீண்டும் வாங்கவும் விரும்ப மாட்டேன்..

அன்னிக்கு அவ.. எங்க அம்மா கைல உள்ளதெல்லாம் முடிச்சிட்டு கடைசியா என் கைல உள்ள ஜாங்கிரிக்கு தாவினாள்.. அம்மாவும் "ஏன் இவ்ளோ நேரம் வச்சிருக்க? வச்சிருந்ததால தான் சின்னகுட்டி கேட்குது.. நம்ம பாப்பா தானே கொடுன்னு" சமாதானம் செய்ய.. நானும் கொஞ்சம் கொடுத்தேன்.. அவ அதையும் ஒரே வாயில் போட்டு கொண்டு மீண்டும் கை நீட்ட எனக்கு அழுகையே வந்து விட்டது.. அழ ஆரம்பித்ததும் அம்மா "வேற வாங்கி தரேன்.. பாப்பாட்ட கொடுன்னு" சொல்ல என் அழுகை அதிகமானது.. கைல உள்ளதை கொடுத்தாலும்.. அழுகை நின்ற பாடில்லை..

எங்க அப்பா (ஆசிரியர்) பள்ளி விட்டு வந்ததும் என் சோகத்திற்கான காரணம் கேட்க அம்மா.. ஜாங்கிரி பிரச்சனையை சொல்லி, "ரெண்டு பேரும் வேணும்னு கேட்டா நான் எங்க போறது?.. வேற ஏதாவது வேணுமான்னு கேட்டா வேணாம்னு அழ ஆரம்பிச்சிடுச்சி.. ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்தால் தானே பிரச்சனை தீரும்" என்று சொன்னார்கள்.. நான் அவர்கள் சொன்னதையே நினைத்து கொண்டு படுத்திருந்தேன்.. இரவு முழுதும் தூங்க வில்லை.. தூக்கம் வரவும் இல்லை.. வடிவேலு மாதிரி, "ஜாங்கிரி போச்சே"ன்னு மனதினுள் புலம்பிட்டே இருந்தேன்..

இது ஒன்றும் முதல் முறை அல்ல.. அவள் விரும்பி சாப்பிடும் எது வாங்கினாலும் பிரச்சனை தான்.. விட்டு கொடுன்னு தினம் சொல்லி, சொல்லியே அம்மாவுக்கு அலுத்து விட்டிருந்தது.. அம்மா அடிக்கடி "விட்டு கொடுடா உனக்கு தேவையானது தானாவே கிடைக்கும்ன்னு தான் எப்போதும் சொல்வாங்க.. போதும் என்ற மனமே பொன் செய்யும மருந்துன்னும்" அடிக்கடி சொல்வாங்க.. அதையெல்லாம் யோசிச்சிட்டு படுத்து கிடந்தேன்.. எதனால இவ்ளோ பிரச்சனை? ஜாங்கிரிக்காகவா? இல்லை அவ சாப்ட்டுட்டாலேன்னு பொறாமையான்னு யோசிச்சேன்.. இல்லை என் தங்கச்சி.. அவளுக்கு பிடிச்சதால தானே அவ சாப்பிடுறான்னு தோணுச்சி..

கடைசியா ஒரு முடிவு பண்ணதும் நிம்மதியா இருந்துச்சுங்க.. இனி அவளுக்கு பிடிச்ச இனிப்பை நான் சாப்பிட மாட்டேன்னு முடிவு பண்ணேன்.. இதுவரை (2010 ஜனவரி 1 வரை) நான் சாப்பிடுவது இல்லை.. அவளுக்கு இந்த விஷயமே தெரியாது.. நான் முடிவு பண்ணது யாருக்குமே தெரியாது.. அதுக்கு அப்புறம் நான் எல்லார்கிட்டயும் எனக்கு "ஸ்வீட்ஸ் பிடிக்காது"ன்னு சொல்லிடு சாப்பிட மறுத்துடுவேன்.. கொஞ்ச நாள் முன்னாடி அம்மா ரொம்ப வற்புறுத்தி "ஏன் சாப்பிடுவது இல்லை" என்று கேட்டு கண் கலங்குனதும்தான் உண்மையை சொன்னேன்.. புலம்பி தள்ளிட்டாங்க.. இது இப்போ எல்லார்க்கும் தெரியும்.. எனக்கு பிடிக்கும் என்பதால் சாப்பிடாமல் இருக்காதே என்று தங்கை கேட்டுக்கொண்டதால்தான் இப்போ நான் இனிப்பு சாப்பிடுகிறேன்..

அடுத்து..
இந்த உலகத்துல உண்மை பேசினால் கூட அடிதாங்க வாங்க வேண்டி இருக்கு.. எப்படின்னு கேட்குறீங்களா? ஸ்கூல்க்கு ஒரு முறை கட் அடிச்சிட்டேன்.. மறுநாள் ஸ்கூல்க்கு போனதும் தான் வினையே ஆரம்பிச்சுது.. லீவ் போட்டே பழக்கம் இல்லாததாலேயும்.. புதுசா ஸ்கூல் மாறுனதாலேயும்.. எனக்கு லீவ் லெட்டர் எழுத தெரியல.. தோழிகிட்ட அட்வைஸ் கேட்க.. அவளோ எனக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால்ன்னு ஆரம்பிச்சி முழுசா ஒரு முறை சொல்லிட்டு (ஒப்பிச்சிட்டு) என்ன காரணமோ அதை போட்டு எழுத கூட உனக்கு தெரியாதான்னு கிண்டல் பண்ணிட்டு போய்ட்டா.. நானே எழுதுவதுன்னு முடிவெடுத்து, எழுதி.. வருகை பதிவேட்டில் வைத்து விட்டு எனக்கு நானே வேட்டு வைத்து கொண்டேன்.. சிறிது நேரத்தில் வந்த ஆசிரியை என்னை அன்புடன் அழைத்து "முதுகில் ஒன்று" வைத்து, உடம்பு சரி இல்லைன்னு எழுதி கொடுன்னு சொல்லிட்டாங்க.. எழுதி கொடுத்தேன்.. அடிச்சதுக்கு காரணமா? "சினிமாவுக்கு சென்ற காரணத்தினால்"ன்னு எழுதுனது தாங்க.. பொய் சொன்னா திட்டுற உலகம் உண்மைசொன்னாக் கூட திட்டும்ன்னு அன்னிக்கு தாங்க தெரிஞ்சிகிட்டேன்.

அடுத்து..
ஒரு முறை டிவியில்.. ரமண மகரிஷி வாழ்க்கை வரலாறு விளக்கப் படமாக ஒளிபரப்பாகியது.. வாசலில் விளையாடிக் கொண்டு இருந்த என் காதில் அப்பப்போ வந்து விழுந்தது.. அதில் ரமணருக்கு சுய கட்டுப்பாட்டை உணர்த்த யாரோ ஒருவர் (பெயர் நினைவில் இல்லை) ரமணரின் நாக்கில் வெள்ளம் வைத்து கொஞ்ச நேரம் சாப்பிடாமல் இருக்க சொன்னாராம்.. ரமணரும் சாப்பிட கூடாது என நினைத்து கொண்டே இருந்தாராம்.. சிறிது நேரம் கழித்து பார்த்தால் வாயில் இருந்த வெள்ளம் கரைந்து போய்விட்டிருந்ததாம்.. ரமணரிடம் அவர், "இது தான் உன் நிலை.. உன் நாவை கூட, உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை" என சொல்லி அனுப்பி வைத்தாராம்.. அதன் பின் ரமணர் தாமாக பழகி, வெள்ளம் நாவில் வைத்தால் கரையாத அளவுக்கு நாவை கட்டுப்படுத்தினாராம்.. அதன் பின் ஐம்புலனையும் அடக்கி வாழ்ந்தவர் அவர்.. இதைக் கேட்டதும் நானும் வைத்து பார்த்தேன்.. அடுத்த நொடி வெள்ளம் காணாமல் போய் விட்டது.. சில முறை பழகியதில் என் நா என் சுய கட்டுப்பாட்டில் வந்தது அன்றே.. இது மாதிரி நிறைய ட்ரை பண்ணிருக்கேன்.. முடிந்த வரை வெற்றியும் கண்டிருக்கிறேன்..

அடுத்து..
கல்லூரி படிக்கும் போது அலைபாயுதே சினிமாவுக்கு தோழிகள் மூவர் எனக்கும் தெரியாமல் அழைத்து சென்று விட்டனர்.. தியேட்டர் வாசலுக்கு போகும் வரை எனக்கு தெரியாது.. எனக்கு கிளாஸ் கட் அடிக்க தெரியலையாம். இவர்கள் என்னை திருத்துறாங்கலாம் (?!).. படம் ஆரம்பிக்கும் நேரம் ஆனதால் என்னை பேச விடாமல் உள்ளேயும் அழைத்துச் சென்று விட்டனர்.. (அவங்களுக்கு கேட்ட நேரம்) ஆனா உள்ள போனதும் தான் தெரிஞ்சிது, மூவருக்கும் துணையாக உள்ள பசங்க இருக்காங்கன்னு.. யார் எப்படி இருந்தா நமக்கென. நம்ம பயம்.. நமக்கு.. ஒருத்தியையும் படம் பார்க்கவோ.. அவங்க ஆள் கூட உட்காரவோ விடவில்லை.. ஒருத்தி தப்பித்து கொண்டாள்.. மற்ற இருவரையும் என்னுடன் தான் இருக்கணும்னு பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டேன்.. ஆனால் அப்போதும் படம் பார்க்க மனம் ஒப்பாமல் "வீட்டுக்கு போகணும் அம்மா திட்டுவாங்க" என்று 16 வயதினிலே கமல் மாதிரி புலம்பிட்டே இருந்தேன்.. என்னை திட்டி கொண்டே இருந்தார்கள் படம் முடியும் வரை.. வீட்டுக்கும் கூட்டிட்டு வந்த விட்டு சென்றார்கள்.. அம்மா கிட்ட எக்ஸ்ட்ரா கிளாஸ் இருந்துச்சினு, அவங்களே பொய் சொல்லி சமாளித்து சென்றார்கள்.. அதன்பின் நிறைய முறை கட் அடித்தார்கள். எனக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுட்டு போவாங்க..

இந்த தொடரை தொடர.. நான் அழைக்கும் நண்பர்கள்..

ப்ரியமுடன்.. வசந்த்..
பித்தனின் வாக்கு..
அண்ணாமலையான்..
s.மகாராஜன்..
மோகனன்..
சங்கவி..
வெற்றி..

இன்னும் யாராவது நண்பர்கள் இந்த தொடரை தொடர நினைத்தால் அவர்களும் தொடரலாம்.. எனக்கு இது மாதிரி எழுதி பழக்கம் இல்லை.. ஏதும் தப்பாக இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்..