Tuesday, February 23, 2010

யாரோ யாருக்காகவோ -2


எனைமறந்து வேலைகளில்
ஈடுபடும் பொழுது சத்தமே இல்லாமல்
மெதுவாக வந்து எனைச் சுமப்பாய்..

கெஞ்சலில் நீ கேட்டதை
நான் கொஞ்சமாய் கொடுத்தாலும்..
"துள்ளல்" துள்ளுவாய்..

உன்னை விட்டு விலகிச் செல்ல
நினைத்தால், மெதுவாக விடுவித்து, பின் வேகமாக
இழுத்து எனைக் கட்டிக் கொள்வாய்..

தோழியிடம் அலைபேசியில்
பேச விடாமல்.. முத்தம் கொடுத்தே
மனதை உன் வசமாக்குவாய்..

"தலைவலிடி" என்று பொய் சொல்லி
அலைபேசியை வைத்துவிட்டு பார்த்தால்..
தூங்குவது போல நடிப்பாய்..

"அதற்குள்ளே தூங்கிட்டியா திருடா"
என்றால்.. உண்மையாய் தூங்கியவன்போல
கோபம் கொள்வாய்..

உன்னை முறைத்துக் கொண்டே..
உன் செல்லக் கோபங்களை உன்னிடம் சொல்லாமல்
நான்மட்டும் சுயநலமாய் மனதினுள் ரசிப்பேன்..

Thursday, February 18, 2010

யாரோ.. யாருக்காகவோ..


கருப்பே அழகு

காந்தலே ருசி

என்றுதானிருந்தேன்;

கருப்பும்

ருசி தானென்று

உணர்ந்தேன்..

உன்னை

முத்தமிட்ட பின்!!..

Sunday, February 14, 2010

என் காதல்..


காதல் சொன்னதும்..
காதல் செய்ததும்..
திருமணம் நடந்ததும்..
காதலில் வாழ்வதும்..
மட்டும் போதுமென்று
நான் நினைக்கவில்லை..

உனக்கு முன் இறந்து
என் நினைவில்
நீ துடிக்கவும் விருப்பமில்லை..

உனக்கு பின் இருந்து
உன் நினைவில்
நான் தவிக்கவும் விருப்பமில்லை..

இயற்கை துணையிருந்தால்
இருவரும் மரணத்திலும்
சேர்ந்திருக்கவே வேண்டுகிறேன்..
சுயநலமாய் இருந்தாலும்!!!..



அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்..
காதலர் தினத்துக்காக எழுதவில்லை.
என் ஹரிக்காக..
உங்கள் தோழி - திவ்யாஹரி..

Monday, February 8, 2010

காவிரி நதி குறித்து ஒரு சந்தேகம்?


நண்பர் பாலாசியின் புரையோடும் ஆலமரம் பதிவு ரொம்பவும் அருமை.. அதை படித்ததும் என் மனதை குடையும் (வலை தொடங்குவதற்கு முன்பிருந்து) சில சந்தேகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. தவறாக இருந்தால் சுட்டி காட்டவும்.. விளக்கம் தெரியாததாலே தான் அதை சந்தேகம் என்கிறேன்.. உங்களுக்கு விளக்கம் தெரிஞ்சா பின்னூட்டத்துல விளக்குங்க. தெரிஞ்சிக்கிறேன்..

நண்பர் பாலாசியின் பதிவில் அவர் சொன்னது.. இது தான்..

//அது அம்மா வந்தால் கொஞ்சம், அப்பா வந்தால் கொஞ்சம், இல்லையேல் கருநாடகத்தில் வெள்ளம் வந்தால் ‘மிகவும்’ கிடைக்கும் வரம். (அதேநேரத்தில் இங்கே மழை அடித்துப்பெய்து கொண்டிருக்கும்) என்றும் இந்த வரம் ‘கடையாது’ என்றும் தெரியும்.//

சரியாச் சொன்னீங்க பாலாசி.. நன்றி..

இப்போ என் சந்தேகங்கள்:-

1) சாதாரணமான நாட்கள்ல தண்ணி தரமாட்டேன்னு சொல்ற கர்நாடகம், மழை பெய்து, அவங்க ஊர் மூழ்குற சமயத்துல மட்டும் ஏன் நம்ம பக்கம் தண்ணி விடுறாங்க?..

2) அப்போ மட்டும் அது அவங்க காவிரி இல்லையா? அந்த சமயத்துல மட்டும் அது பொது காவிரியா ஏன் மாறுது?

3) மற்ற நேரத்துல தண்ணி தராதவங்க அவங்க ஊர் மூழ்குற நேரம் மட்டும் அணை திறந்து விட, இது (தமிழ்நாடு) என்ன திறந்த மடமா?

4) ஏன் இப்படி தமிழ் நாட்டுக்காரன் மட்டும் கர்நாடகம் நல்லா இருக்கணும்னு நெனச்சி, அந்த தண்ணிய ஊருக்குள்ள விட்டுக்கிட்டு, அதிக வெள்ளப் பெருக்கால தன்னை தானே அழிச்சிக்கிறான்..

5) அந்த மாதிரி சமயத்துல நம்ம அரசாங்கம் ஏன் ஒரு ஒப்பந்தம் போட கூடாது? அதாவது..

"இப்ப வரும் தண்ணி எப்போதும் வருமென்றால் மட்டும் வரட்டும். இல்லேன்னா, பரவாயில்லை எங்களுக்கு தண்ணியே வேண்டாம்", என்று ஏன் சொல்ல கூடாது? உரிமையா தண்ணி கேட்க தான் முடியவில்லை நம்மால், நம்ம பக்கம் தண்ணி வர வேண்டாம்னு சொல்ல கூடவா உரிமை இல்லை?"

6) ஏன் நம்ம அரசாங்கம் கூட இந்த விஷயத்த யோசிக்கல?

7) இல்லேன்னா அப்படி ஒப்பந்தம் போட சொல்லிக் கேட்டா, அதனால ஏதாவது பிரச்சனை வருமா?

8) அவங்க மக்கள் தண்ணில சாகக்கூடாதுன்னு நாம யோசிக்கிறா மாதிரி, தண்ணி இல்லாம நம்ம விவசாயிகள் படும் கஷ்டத்தை பத்தி கர்னாடக மக்கள் ஏன் யோசிக்கல?

9) குஜராத்துக்கு வந்த மாதிரி பூகம்பம் ஏதாவது, கர்நாடகத்துக்கு வந்தா முதல்ல உதவுறது தமிழ்நாடாக தானே இருக்கும்? இத கூட யோசிக்க மாட்டாங்களா அந்த மக்கள்?

10) காவிரிய பொதுவா பயன்படுத்த கூடாதுன்னா நாம தரும் மின்சாரத்த மட்டும் ஏன் ஏத்துக்கணும்? நாம ஏன் கொடுக்கணும்?

இல்லைன்னு வர்றவங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்குறவன் தமிழன்னு வசனம் பேசி சமாதானம் ஆக முடியலைங்க.. எதையாவது செஞ்சி காவிரியை வரவைக்க முடியாதான்னு ஒரு ஆசை தான்.. இப்படி தான் செய்யணும்னு நான் சொல்லலைங்க.. இப்படி செஞ்சா என்னனு தான் கேட்குறேன்.. இப்படி செய்யலாமானு தான் கேட்குறேன்.. சொல்லுங்க நண்பர்களே?

குஜராத் பூகம்பம்..
அமெரிக்க விமான குண்டு வெடிப்பு..
அந்த்ராக்ஸ் பரவல்..
சுனாமி..
பன்றிக் காய்ச்சல்..
ஹைத்தி நிலநடுக்கம்..
மனிதனை அழிக்க
விதி பலவாறு வந்தாலும்..
வாழ்க்கை நிலையல்ல என்பது தெரிந்தாலும்..
மனித மனம் என்னவோ
தண்ணீரை கூட
விட்டுக் கொடுக்க நினைப்பதில்லை!!!!...

Sunday, February 7, 2010

சின்னச் சின்ன ஆசைகள்..


நான் கோபப்பட்டால்
நீ சமாதானம் செய்ய வேண்டும்..
நீ சமாதானம் செய்தவுடன் -நான்
உன் மார்பினில் ஒளிந்து கொள்ள வேண்டும்!!..

நான் சமைத்து வைத்தால்
நீ எனக்கு ஊட்டி விட வேண்டும்..
நீ ஊட்டி விடும் பொழுது -நான்
உன் விரல் கடிக்க வேண்டும்!!..

நான் பாய் விரித்தால்
நீ நானுறங்க உன் மடி தர வேண்டும்..
நீ மடி தந்து உறங்கும் பொழுது -என்
கனவிலும் நீ வர வேண்டும்!!..

நான் குளித்து விட்டு வந்தால்
நீ உடை தேர்வு செய்ய வேண்டும்..
உன் உயிரோடு கலந்த என்னை
நீ மட்டுமே ரசிக்க வேண்டும்!!..

நான் ஊர் சுற்றிப்பார்க்க நினைத்தால்
நீ நானறியாமல் அழைத்து செல்ல வேண்டும்..
நீ அழைத்து செல்லும் இடங்களில் எல்லாம்
நான் உன்னை மட்டுமே ரசிக்க வேண்டும்!!..

Saturday, February 6, 2010

இயலாமை..


ஆசிரியரின் கேள்விக்கு
பதில் தெரிந்தாலும்
சொல்ல விடாமல்
"சார் பொண்ணு மக்கு" என
கேலி செய்யும் ஆசிரியரை
"உங்கள் பெண் எப்படி?" என்று
கேட்க நினைத்தாலும் அழுவதை தவிர
எதுவும் செய்ய இயலவில்லை..

பழகிய தோழி பொய் சொல்லி
என்னிடம் அன்பளிப்பு பெற்றது
தெரிந்தும் சந்தோஷமே பட்ட நான்..
அதை அவள் இன்னொருத்திக்கு
பரிசளித்ததை அறிந்ததும்
துடிப்பதை தவிர
எதுவும் செய்ய இயலவில்லை..

பழகிய நண்பன் ஆறுதலாய்
இல்லாமல், காதல் என்று சொல்லி
கஷ்டப் படுத்தும் போதும்..
வேண்டாமென சொல்லி
மறுத்தாலும் மாறாத அவன்
காதலைச் சொல்லி இம்சிக்கும்
தோழியின் நட்பை இழப்பதை தவிர
எதுவும் செய்ய இயலவில்லை..

அத்தை வெளி வேஷமிட்டு
பல கஷ்டம் கொடுத்தாலும்
அன்புக் கணவனை
கொடுத்ததுக்காக அனைத்தும்
சகித்துக் கொள்வதை தவிர
எதுவும் செய்ய இயலவில்லை..

கொட்டிக்கொண்டே இருந்தால்
தலை தூக்கும் புழு போல
இன்று தலை நிமிர்ந்தேன்
அத்தையிடம்..
ஒரு கேள்வியே கேட்டு
வந்தாலும் பழக்க தோஷமோ
என்னவோ இப்போதும்
கண்ணீரே வருகிறது..

பெண்ணின் சுதந்திரம் வேண்டி
ஆண்களே போராட முன் வந்தாலும்
பெண்ணுக்கு எதிரி பெண்ணே..
கண்ணீருடன்..


(பி.கு) இது என் தோழியின் புலம்பல்..

Thursday, February 4, 2010

சுனாமிக்கு பிறகு..


பேனா பிடிக்க தெரியாத வயதில்
கிறுக்கியதை அழகு என்றாய்..

அ, ஆ எழுத தொடங்கும் வயதில்
கிறுக்கியதை ஓவியம் என்றாய்..

நான் ஒன்று நினைக்க
அது ஒன்றாக முடிந்த
வார்த்தைகளை கவிதை என்றாய்..

கிறுக்கிய கிறுக்கல் முதல்..
நேற்று வரைந்த ஓவியம் வரை..

பொக்கிஷமாய் பத்திரப்படுத்திய
அனைத்தும் உன்னால் என்னுடன்..

சந்தோஷமாய் இருக்க நினைத்து போன
கடற்கரை கூட முன்போல் உள்ளது
சுனாமிக்கு பிறகு..

உன் நினைவுளை மட்டும்
தந்துவிட்டு நீ எங்கு சென்றாய் என் அம்மா..

(பி.கு) அந்த புகைப்படம் பார்த்ததும் தோன்றியது. அவ்வளவே..

Wednesday, February 3, 2010

தர்ஷனுக்கு பிறந்த நாள்..


3 முறை அறுவை சிகிச்சை செய்து
மகள் படும் துன்பத்தை
காண சகிக்காத
என் தந்தை..
தன்னை தொலைத்து
என்னை உயிர்ப்பித்து
சென்றார்..

அவரின் பாசம்
பிரம்மனை கலைத்ததோ.. என்னவோ..
என் தங்கை வயிற்றில் அன்றே
கருவானது.. உருவானது..

எங்கள் சந்தோஷத்தை
நிலைக்க செய்தது என்
தங்கை(க) மகன் வருகை..

தந்தையை இழந்து சிரித்தவர் உண்டோ..
நாங்கள் சிரித்தோம்..
தந்தையை இழந்து மகிழ்ந்தவர் உண்டோ..
நாங்கள் மகிழ்ந்தோம்..

அதையும் கண்டு பொறுக்காதோர்
"இதுவா உங்க அப்பா ச்சே" என
முகம் சுழித்தனர்..

யாதும் அறியா
என் தங்கையின்
2 வயது முதல் குழந்தையை
"வாடா.. தம்பியை பார்க்கலாம்"
என அழைத்து சென்றோம்..

தன் தம்பியை கண்ட அந்த மழலை
குழந்தையை பார்த்ததும்
மழலை மொழியில் சொன்னது..
"ஐ! தாத்தா.." என்று..

குழந்தையும் தெய்வமும் ஒன்று
என்பது இது தானோ?

எங்கள் தந்தை வந்ததை
உணர்த்த வந்த
எங்கள் சுவாதியும்..
தந்தையாகவே வந்த
எங்கள் தர்ஷனும்..
தெய்வமன்றி வேறென்ன?

நாளை தர்ஷனுக்கு
இரண்டாம் வருட பிறந்த நாள்..
வாழ்த்துகிறோம் எங்கள் செல்வத்தை..


(பி.கு) என் profile-ல இருக்குற புகைப்படத்தில் உள்ளது சுவாதி.. செல்லமா "சின்னக்குட்டி".. இந்த பதிவுல இருக்குற புகைப்படத்தில் உள்ளது தர்ஷன். அப்பான்னு தான் கூப்பிடுவோம்..